பள்ளிகள் மூடப்பட்ட மாவட்டங்களில்.. ஆன்லைன் கிளாஸ் எடுக்காதீங்க.. அமைச்சர் அன்பில் மகேஸ்

Meenakshi
Oct 15, 2024,01:19 PM IST

சென்னை:   கனமழை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள மாவட்டங்களில், மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.


வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால், தற்போது தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த இரண்டு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகர உள்ளது. 


இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும்  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இதன் காரணமாக இன்று காலை முதலே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. 


இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால், நேற்றே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை  அறிவிக்கப்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.கோவையில் உள்ள பள்ளிகளும் இன்று  அரை நாள் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ள மாவட்டங்களில், மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்