குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை.. அமித் ஷா திட்டவட்டம்

Meenakshi
Mar 14, 2024,06:10 PM IST

புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.


சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. சட்டம் நிறைவேறி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019 அறிமுகம் செய்யப்பட்டது. 


இதன்படி இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கியர்கள், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் அங்கு சித்திரவதைகளை சந்தித்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்திருப்பது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இது தேர்தலை மனதில் கொண்டு அமல்படுத்தப்படுகிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு தமிழ்நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.  தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  கருத்து தெரிவிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை.  இந்த சட்ட திருத்தம் பற்றி நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது. அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநிலங்கள் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.