"லியோ" விவகாரம்.. சினிமா விவகாரத்தில் அரசு தலையிடாது.. அமைச்சர் ரகுபதி

Meenakshi
Oct 17, 2023,04:53 PM IST

சென்னை: லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.


லியோ விவகாரம் திரையுலகை சுழற்றியடித்து வருகிறது. வேறு யாருடைய படத்துக்கும் கொடுக்காத அளவுக்கு லியோ படத்துக்கு சிக்கல்கள் வருவதாக பலரும் கருத ஆரம்பித்துள்ளனர். ஒரு சினிமா காட்சிக்காக கோர்ட் வரை சென்ற முதல் படம் லியோதான். அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி கோர்ட்டுக்குப் போனது லியோ படக் குழு.




இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் லியோ விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை, திரையுலகம் எங்கள் நட்பு உலகம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும்.


இன்றைக்கு திரையுலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசே காரணம், திரைத்துறையை முடக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை, சிறிய தயாரிப்பாளர்களை கூட இந்த அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்கு தடை போட்டு திரையுலக விரோதப் போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை  சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். 


லியோ படத்திற்கு நாளொன்று 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் திரைத்துறைச் செழிப்பாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். லியோ  திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்றார் அமைச்சர் ரகுபதி.