மலையில் காணாமல் போன 8 வயது சிறுவன்.. பனியைத் தின்று உயிர் வாழ்ந்த அதிசயம்!

Su.tha Arivalagan
May 11, 2023,04:30 PM IST
ஓன்டோனோகன், மிச்சிகன்:  அமெரிக்காவில் பூங்காவுக்குச் சென்ற 8 வயது சிறுவன் வழி தவறி மலைப் பகுதியில் போய் மாட்டிக் கொண்டான். 2 நாள் மலையில் தவித்த அவன் வெறும் பனியை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளான்.

மிச்சிகன் மாகாண போலீஸ் படையினர் அந்த சிறுவனை தற்போது பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். 

மிச்சிகன் மாகாணம் ஓன்டோனோகன் பகுதியைச் சேர்ந்த சிறுவன் நன்டே நிமி. 8 வயதாகும் இவன் தனது வீட்டின் அருகே உள்ள பார்குபைன் வனப் பூங்காவுக்குப் போயுள்ளான். அங்கு குச்சி சேகரிப்பதற்காக சிறுவன் போனான். அப்போது வழி தவறி அருகில் இருந்த மலைப் பகுதிக்குப் போய் விட்டான். அங்கிருந்து திரும்பி வரத் தெரியவில்லை. அப்படியே வழி தவறி காடு, மலை என அலைந்துள்ளான்.



இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக மிச்சிகன் மாகாண போலீஸார் குழு அமைத்து சிறுவனைத் தேடும் முயற்சியில் இறங்கினர். 2 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஒரு இடத்தில் பதுங்கி காணப்பட்ட சிறுவனைக் கண்டுபிடித்தனர். மரங்களுக்குக் கீழ் சிறுவன் அமர்ந்திருந்தான். தனியாக காட்டுக்குள் மாட்டிக் கொண்ட போதிலும் கூட அவன் பயப்படாமல் தைரியமாக இருந்துள்ளான். 

சாப்பிட எதுவும் இல்லாததால் கொட்டிக் கிடந்த பனியை எடுத்து சாப்பிட்டுள்ளான்.  சிறுவன் நலமாக உள்ளான். அவனை மீட்ட போலீஸார் குடும்பத்தாரிடம் அவனை ஒப்படைத்தனர். இரவில் குளிர் அதிகமாக இருந்ததால் கட்டைகளை வைத்து தீமூட்டி அந்த கதகதப்பில் சிறுவன் இருந்துள்ளான். பகலில் பனியை சாப்பிட்டுள்ளான். அதனால்தான் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருந்துள்ளான்.

சிறுவன் செய்த புத்திசாலித்தனமான காரியம் என்னவென்றால், தான் வழி தவறி வந்து விட்டோம் என்று தெரிந்தவுடனேயே மேற்கொண்டு போவதை நிறுத்தி விட்டான். எப்படியும் தன்னைத் தேடி யாரேனும் வருவார்கள். வருபவர்கள் உடனடியாக தன்னைக் கண்டுபிடிக்கு இதுதான் சரியான வழி என்று அவன் முடிவு செய்துள்ளான். ஒரு வேளை அவன் பதட்டத்தில் அங்குமிங்கும் போயிருந்தால் மிகவும் டீப்பான பகுதிக்கு போய் மாட்டிக் கொண்டிருக்க நேர்ந்திருக்கும். கண்டுபிடிப்பதற்கும் சிரமமாக போயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.