புயல் பாதித்த சென்னை உள்ளிட்ட.. 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

Meenakshi
Dec 05, 2023,05:19 PM IST

சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கியதால்,  இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாளையும் (டிசம்பர் 6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மிச்ஜாங் புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, கடல் போல் காட்சி அளிக்கின்றன. புயல் சின்னமானது தமிழகத்தை விட்டு விலகி, ஆந்திராவிற்கு அருகே சென்றாலும் தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. பல பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால் மின்சாரம், மொபைல் டவர், இணையதள சேவை ஆகியவை தொடர்ந்து முடங்கி உள்ளன. 




இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த மாவட்டங்களின் நிலைமை படு மோசமாக இருப்பதால் நாளையும் விடுமுறை விடப்படுகிறது. மிச்ஜாங்ங் புயல் மிக மோசமான பாதிப்பை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த சென்னையும் விடாமல் பெய்த மழையில் மிதக்கிறது. வரலாறு காணாத மழைப்பொழிவை மிச்ஜாங் புயல் ஏற்படுத்தி விட்டது.


சென்னை மாநகரிலும், அதன் புறநகர்களிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னரும் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் போக்குவரத்து இயல்பு நிலையை அடையவில்லை.மின்சாரம் சரியாக வில்லை. அனைத்து வாகனங்களும் நீரில் மூழ்கியதால் சேத மதிப்பு அதிகமாக உள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.  இதைத் தொடர்ந்து நாளையும் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.