எம்ஜிஆர் பிறந்தநாள்.. தமிழில் ட்வீட் போட்டு புகழ் பாடிய பிரதமர் மோடி..நெகிழ்ந்த எடப்பாடியார்!

Aadmika
Jan 17, 2024,11:31 AM IST

டில்லி : தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் தமிழில் ட்வீட் போட்டு எம்ஜிஆர் பற்றி புகழ்ந்துள்ளார். 


இவரைப் போலவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் எக்ஸ் தள பக்கத்தில் எம்ஜிஆர் பற்றிய பெருமைகளை தெரிவித்துள்ளார்.


எம்ஜிஆர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி அவருடைய பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் ஏராளமான கட்சி தொண்டர்களும், அவரது ரசிகர்களும் திரண்டு, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 




இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் ட்வீட் போட்டுள்ளார். வழக்கமாக தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாள் போன்ற பண்டிகைகளின் போது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க தான் மோடி, தமிழில் ட்வீட் போடுவார். ஆனால் தற்போது எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு அவர் தமிழில் வாழ்த்துப் போட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


மோடி தனது எக்ஸ் தள பதிவில், " தலைசிறந்த எம்ஜிஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், " அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் கரங்களுக்கு சொந்தக்காரர். கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளை கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால் அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று மக்கள் தங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்களை தான். ஏழை எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித்தலைவரின் ஆட்சியில் தான். 




அவர்களின் குடில்களில் மின்சாரம் விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில் தான். புரட்சித்தலைவர் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல்களில் அப்புறப்படுத்த கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூலூரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் இன்னும் பல்கி பெருகி வளரும். 


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கம்மாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. பொன்மனச் செம்மல் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளான என்று சென்னை பசுமைவழிச் சாலை செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினேன்." என குறிப்பிட்டுள்ளார். 


எம்ஜிஆர் குறித்த நீண்ட அறிக்கையுடன் எம்ஜிஆரின் இல்லத்திற்கு நேரில் சென்று தான் அஞ்சலி செலுத்திய போட்டோக்களையும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.