மேட்டூர் அணை நிரம்ப.. இன்னும் ஒரு அடிதான் பாக்கி.. காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Manjula Devi
Jul 30, 2024,10:05 AM IST

சேலம்:    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 118.84 கன அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி அளவே உள்ளதால் காவிரிக் கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததாலும்,  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதாலும் கர்நாடகா அணைகளான கே ஆர் எஸ், கபினி, போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் வேகமாக உயர்ந்து இன்று அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.




கடந்த ஜூன் நான்காம் தேதி வாக்கில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடிக்கும் குறைவாக இருந்த நிலையில், பருவ மழை காரணமாக தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென  உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை நெருங்க இன்னும் ஒரு அடியே பாக்கி உள்ளது.


இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைக்குள் 120 அடியை எட்ட உள்ளது. நீர்மட்டம் 117 அடியிலிருந்து தற்போது 118.84 கனடியாக அதிகரித்துள்ளது.  அணையில் 91.632 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 70,257 கன அடியில் இருந்து 62,870 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளவை  எட்டவுள்ள நிலையில், 16 கண் மதகு பாலம் வழியாக எப்போது வேண்டுமானாலும் நீர் திறந்து விடப்படலாம் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தவிர டெல்டா மாவட்டங்களை ஒட்டிய 13 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கண்காணிப்பை தீவிர படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக தீயணைப்பு துறை வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரித்துள்ளனர்.