மேட்டூர் அணை.. விரைவில் 120 அடியை எட்டும் .. காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Manjula Devi
Jul 29, 2024,06:49 PM IST

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்படுவதால், 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர்  அணைக்கு நிமிடத்திற்கு நிமிடம் நீர் வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1,21,934 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதன் காரணமாக தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்காகவும் ஆடிப்பெருக்கு விழாவிற்காகவும் விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது  நீர் வெளியேற்றம் விநாடிக்கு 23,000 கன அடி நீராக உயர்த்தி வெளியேற்றப்படுகிறது.




மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ள நிலையில், 16 கண் பாலம் வழியாக எப்போது வேண்டுமானாலும் அதிகப்படியான உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக  நீர்வள துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து தற்போது அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே தீவிர படுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர் பண்ணவாடி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.