மேட்டூர் அணை நீர் மட்டம் 116 அடியைத் தாண்டியது.. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Su.tha Arivalagan
Jul 29, 2024,09:02 AM IST

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 116 அடியைத் தொட்டுள்ளது. சில மணி நேரங்களில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவிலான நீர் வரத்து உள்ளது. இதற்குக் காரணம், கர்நாடக காவிரி அணைகள் நிரம்பியுள்ளதாலும், அங்கிருந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும் மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.


இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டும் 116.360 அடியாக இருந்தது. நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 91 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.




அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 4 அடியே உள்ளது. அணைக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருப்பதால இன்னும் ஓரிரு மணி நேரத்தில் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை நிரம்பி விட்டால் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படும். எனவே காவிரிக் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படும் சூழல் உருவாகியுள்ளதால், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.