மேட்டூர் அணைக்கு.. நீர்வரத்து கணிசமாக குறைந்தது.. நீர் திறப்பை அடியோடு குறைத்த கர்நாடகா!

Manjula Devi
Aug 05, 2024,11:40 AM IST

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தற்போது வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வழிந்தது‌.பின்னர் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடகா அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டது‌. இந்த நிலையில், கர்நாடக காவிரி நீர் பிடிப்பு  பகுதிகளில் தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை அடியோடு குறைத்து வருகிறது கர்நாடகா.




கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது தற்போது கர்நாடக அணைகளிலிருந்து வெறும் 31,000 கன அடி நீர் அளவில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் நீர் திறப்பையும் தற்போது நீர்வளத்துறை அதிகாரிகள் கணிசமாக குறைத்துள்ளனர்.


மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வினாடிக்கு 70000 கன அடியிலிருந்து தற்போது 50000 கன அடியாக குறைந்துள்ளது .16 மதகு கண் வழியாக 28,500, மின் நிலையம் வழியாக 21,500 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.630 மில்லியன் கன அடியாக உள்ளது.