தொடர் கனமழை எதிரொலி.. மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.. மேட்டூர் அணை.. கரையோரங்களுக்கு எச்சரிக்கை

Manjula Devi
Aug 12, 2024,06:40 PM IST

சென்னை:   தொடர் கனமழை காரணமாக தற்போது இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த மாதம் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் வரத்து அதிகரித்து கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. கே எஸ் ஆர் மற்றும் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால்  அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது.




மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில்  மழை அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது குறைக்கப்பட்டது. தொடர்ந்து எட்டு நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வந்த மேட்டூர் அணைக்கு‌ வரும் நீரின் அளவு குறைந்து அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து 16 கண் மதகுகள் மூடப்பட்டன.


இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 20, 505 கனடியாக இருந்த நிலையில் இன்று காலை 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. 


தற்போது 16 மதகுகண் வழியாக விநாடிக்கு 4500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் டெல்டா பாசனத்திற்காக 21,500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால்  இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்