100 அடியைத் தொட்டது மேட்டூர் அணை.. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.. விரைவில் ஃபுல் ஆகும் வாய்ப்பு!

Manjula Devi
Jul 27, 2024,05:16 PM IST

சேலம்:   கர்நாடக காவிரி அணைகளிலிருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான நீரால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் ஆற்றில் மலர் தூவியும், வழிபாடு நடத்தியும் மகிழ்ந்து வருகின்றனர்.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கே ஆர் எஸ், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் இங்கிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேலாக உபரி நீர் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தற்போது மேட்டூர் அணைக்கு, அதிகமான நீர் வந்து கொண்டிருக்கிறது.




கடந்த  வருடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடிக்கும் கீழாக இருந்தது. இதனால் டெல்டா விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் மிகுந்த வேதனையுற்றனர். இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 100 அடியை எட்டியுள்ளது. இதனால் மதகு முன்பு மலர் தூவி, காவிரி அன்னையை வேண்டி பூஜை செய்து, விவசாயிகள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கன அடியில் இருந்து தற்போது 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 63.693 டிஎம்சி ஆக உள்ளது.


ஆடிப்பெருக்கு.. அமர்க்களப்படுத்த மக்கள் ஆர்வம்:




வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி காவிரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நன்னாளில் காவிரி பெருக்கெடுக்கும் இடங்களில் மக்கள் ஒன்று கூடி, நீராடி ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவர். இது தவிர முன்னோர்கள் சொல்வது போல ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப விவசாயிகளும் இந்த நாளில் காவிரி தாயை வேண்டி நீராடி விவசாய பணியை தொடங்குவது வழக்கம். இதற்காக காவிரி ஆற்றின் படித் துறைகளில் பல்வேறு வழிபாடுகளையும் மேற்கொள்வர்.


இந்த நிலையில் இந்த வருடம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், அணை 100 அடியைத் தொட்டு விட்டதாலும் மக்கள் பெரும் உற்சாகத்துடன் ஆடிப் பெருக்கைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். ஆடிப் பெருக்கையொட்டி, நாளை முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.