108 அடியைத் தொட்டது மேட்டூர் அணை.. ஓரிரு நாளில் நிரம்பும்.. மக்கள் பூஜை செய்து மகிழ்ச்சி!
சேலம்: காவிரி டெல்டா பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் உயிர் நாடியான மேட்டூர் அணை 108 அடியைத் தொட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளதால் அணையில் கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அணை வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அணை நிரம்பியதும் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், விரைவில் நிரம்பும் என்பதாலும் உபரி நீர்க் கால்வாய்களில் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. காவிரிக் கரைகளில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை தனது வாழ்நாளில் 71வது முறையாக 100 அடியைத் தாண்டியுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் சூழலும் எழுந்துள்ளது. ஆடிப் பெருக்கு விழா நெருங்கி வரும் நிலையில் அணை நிரம்பும் நிலை உருவாகியிருப்பதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைந்துள்ளனர். இந்த முறை ஆடிப் பெருக்கு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட காவிரிக் கரையோர மக்கள் தயாராகி வருகின்றனர். அணையில் தண்ணீர் திறக்கப்படும்போது திருச்சியில் அகண்ட காவிரியாக அது மக்களைக் குளிர்விக்கப் போகும் அந்தக் கண் கொள்ளாக் காட்சியை கண்டு ரசிக்க, காவிரி அன்னையிடம் கால் நனைத்து உயிர் நனைக்க மக்கள் இப்போதே ஆர்வத்துடன் காத்துள்ளனர்.