மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு.. நீர்வரத்து தொடர்ந்தால் 100 அடியை விரைவில் எட்டும்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியில் இருந்து தற்போது 79,382 கன அடியாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 82 அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து அணை நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் ஒகேனக்கல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக காவிரி ஒகேனக்கல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தத் தொடர் கனமழை காரணமாக தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79, 382 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து தற்போது நீர் இருப்பு 43.978 டிஎம்சி ஆக உள்ளது.குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 82 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மேட்டூர் அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் பத்தாவது நாளாக இன்றும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை:
கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைப்பது உறுதியாகிவிட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாசன ஆறுகள், மழைநீர் வடிகால்கள் கால்வாய்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகள் மற்றும் நாணல் நார்களை அகற்றி தூர்வார வேண்டுமெனவும், சம்பா சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.