கர்நாடகத்தில் விடாமல் மழை.. பொங்கி வரும் காவிரி.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்: கர்நாடகத்திலும், கேரளாவிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, காவிரியில் வினாடிக்கு 44 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வர ஆரம்பித்துள்ளது.
கேரளா மாவட்டம் வயநாடு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், கபினி அணைக்கு தினந்தோறும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபிணி அணை ஏற்கனவே நிரம்பியுள்ளது. இந்த நிலைியல் நேற்று வரை கபினி அணையில் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 40,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் கபினி அணைக்கு அருகே உள்ள நுகு என்ற அணையிலிருந்து 4000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கே ஆர் எஸ் அணையின் நீர் மட்டம் நேற்று 107.06 அடியாக இருந்தது. ஆனால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் இன்று 110.60 அடியாக உள்ளது. ஒரே நாளில் கே ஆர் எஸ் அணை மூன்று கன அடி உயர்ந்த நிலையில், வரும் நாட்களில் இந்த அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்தும் காவிரியில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரானது தினசரி அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கே ஆர் எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் ஒட்டுமொத்தமாக வினாடிக்கு 44,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஓகனேக்கலுக்கு விநாடிக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,910 கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.