மெட்ரோ ரயிலுடன்.. எப்போதும் இணையும் பறக்கும் ரயில்.. எதிர்பார்ப்பில் சென்னை
சென்னை: சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்தபடியே உள்ளது. சென்னையில் தற்போது தமிழ்நாட்டு மக்களை விட பிற மாநில மக்கள்தான் அதிகம் உள்ளனர் என்று கருதும் அளவுக்கு மக்கள் தொகை பெருகி விட்டது. காரணம் ஐடி நிறுவனங்களின் பெருக்கம். வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விட்டதால் போக்குவரத்து நெரிசலும் கண்ணைக் கட்டுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை ரயில்கள்தான் மக்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில்கள், மெட்ரோ ஆகியவை மக்களின் போக்குவரத்து தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுகின்றன. இந்த நிலையில் தலைநகரில் பெருகி வரும் போக்குவரத்து, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவை காரணமாக பல்வேறு தொலைநோக்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.
சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மெட்ரோ லைட் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல இன்னொரு மெகா திட்டமாக, மெட்ரோவையும், பறக்கும் ரயிலையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அதேபோல வேளச்சேரியையும், பரங்கிமலை ரயில்நிலையத்தையும் இணைக்கும் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை கடற்கரை -வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ரயில் நிலையங்களை சுற்றி 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தப்படும்.
பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைத்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. அதன் பின்னர் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தி தரத்துடன் பறக்கும் ரயில்களை இயக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.