"மெட்டா"வின் அடுத்த ஷாக்கர்.. மேலும் 10,000 ஊழியர்களை நீக்க முடிவு!
டெல்லி: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மேலும் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாம்.
மெட்டா நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. அதன் 18 ஆண்டு கால வரலாற்றில் பெருமளவிலான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது அதுவே முதல் முறையாகும். இந்த பணி நீக்கத்திற்குப் பின்னர் 2022ம் ஆண்டு இறுதியில் மெட்டாவின் ஊழியர்கள் எண்ணிக்கை 86,482 ஆக இருந்தது. இது 2021ம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிலையில் தற்போது 2வது சுற்று ஆட்குறைப்பில் ஈடுபட மெட்டா முடிவு செய்துள்ளது. இந்த முறை 10,000 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவுள்ளனர். இந்த செய்தி வெளியானதுமே மெட்டா நிறுவன பங்குகளின் மதிப்பு 6 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. மேலும் 5000 புதிய ஊழியர்களை எடுக்கும் திட்டத்தையும் மெட்டா வைத்திருந்தது. அதையும் தற்போது ரத்து செய்து விட்டது. மேலும் பல புதிய திட்டங்களையும் கூட அது கைவிட்டுள்ளது.
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் ஜக்கர்பர்க் வெளியிட்டுள் அறிக்கையில், புதிய பொருளாதார சூழல் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். அதற்கு இந்த 2வது சுற்று ஆட்குறைப்பு உதவும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பெரிய வங்கிகள் திவாலாகி விட்டன. பொருளாதார மந்த நிலையை ஐரோப்பா எதிர்கொண்டுள்ளது. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் பொருளாதார சிக்கண நடவடிக்கையை தொடங்கி விட்டன. இதனால் ஆட்குறைப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை தகவல் தொழில்நுட்பத் துறையில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்பது சோகமான ஒரு புள்ளிவிவரம் ஆகும்.