கொஞ்சம் தாலாட்ட வருவாயா.. குழப்ப மனதை குளிர்விக்க!

Hamridha
Jan 01, 2023,10:57 AM IST
எண்ணங்கள் பல, கொட்ட வரும் தேனீகள் கூட்டம் போல மனதில் மொய்க்கிறதா!! சாந்தம் என்ற சொல்லை மனது மறந்து விட்டதா!! ஆனால் மறந்து விடாதீர்கள், இந்த கணமும் கடந்து போகும்..

வாழ்வின் சில தருணங்களில், இப்படியும் சில காலம் அமையும்.. பல செயல்களை ஒரே நேரத்தில் முடிக்க வேண்டிய கால நெருக்கடி.. நமக்கு துளி அளவும் பிடிக்காத காரியத்தை செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.. பொறுப்புகள் பலவும் தோளில் பளுவாய்  ஏற.. தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள்  ரயில் போல வண்டி கட்டி நிற்க.. இப்படி பல பல எண்ணங்கள் மனதை வதைக்கும் நாட்களும் சில சமயம் வந்து தான் ஆகிறது.. அவை நம்மை எரிச்சலூட்டவும் செய்யும்.



ஆனால் அவையாவும் நிலையானவை அல்ல.. சில கால போக்கில் தானாகவே சரி ஆகிவிடும்.. சில நாம் முயற்சி கொண்டு தீர்வு கண்டு விடுவோம்.. அது வரையிலான  மன அழுத்தத்துடனான நாட்களில் பல, தூக்கம் மறந்து கிடைக்கும் விழிகள்..

அப்படி தூக்கம் இழந்த இரவில் விட்டத்தை முறைத்த படி என்ன செய்வதென்று விடை தேட யோசிக்க ஆரம்பித்த மனது, இடையில் எப்பொழுதோ யோசனையை நிறுத்தி விட்டு  மௌனமாகி  இருக்கும்.. கண்கள் மட்டும் உறங்க மறந்து விட்டம் பார்த்த படி இருக்கையில் உறங்கா விழிகள் லேசாக எரிய ஆரம்பிக்க, அப்போது தான் விடிய இன்னும் ஓரிரு மணி நேரம் மட்டுமே உள்ளது என்று நினைவு வந்து சிறிது உறங்கியதும் ஒலிகடிகை அலறி எழுப்பி விட, எழுந்தவுடன் இரவு சிந்தனையில் ஓடிய அனைத்தும் நினைவுக்கு வர சலிப்புடன் நாள் தொடரும்..

இதில் இருந்து மீண்டும் வெளியேற மறந்து இது தான் இனி தினசரி என்று ஒப்புக்கொண்ட தோரனையில் ஏற்றுக்கொண்டிருந்தாலும், சில நேரங்களில் கோபத்திலும் வெறுப்பிலும் வெடித்து சிதறும் மனது..

ஆனால் அப்படி பட்ட நாட்களையும் அமைதியாய் மாற்றலாம்.. கொஞ்சம் பொறுமையும் தெளிவும் மட்டும் போதுமானது... ஒரு நாள் உங்கள் தினசரி வாழ்வில் இருந்து விலகி, ஒலிகடிகை இல்லாமல் உறங்கி விழித்து பிடித்த உணவை சுவைத்து, நேரம் போக்கி, இப்படியும் சிறிது நேரம் என்று நிம்மதி மூச்சு விட்டு எவ்வளவு நாட்கள் ஆனது என்று தோணும் போது மெல்ல சிந்திக்க தொடங்குங்கள்..

உங்கள் பிரச்சனைகளை பட்டியல் இடுங்கள், அதில் கால போக்கில் தானாக மறைய கூடியவை எவை.. உங்கள் முயற்சியால் விரைவில் முடிய கூடியவை எவை.. சிறிது காலம் காத்திருந்து தான் தீரவேண்டியவை எவை.. நாம் முயற்சிக்கு சம்மந்தம் இல்லமால் காலத்தின் கட்டாயம் காரணமாக வருத்தம் தருபவை  எவை.. காரணமே இல்லாமல் ஒன்றும் இல்லாததை பிரச்சனை என்று கருதி நம்  மன கணக்கில் வைத்திருக்கும் மீதி என எல்லாவற்றையும் வகை பிரியுங்கள் ..

ஒவொன்றிற்கும் நிதானமாக யோசித்து நிலையான தீர்வு கண்டறியுங்கள்... தீர்வு கிடைத்து விட்டதால் அதை நோக்கி பயணிக்க மனதளவில் உங்களை நீங்களே தயார் ஆக்குங்கள்.. புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு தைரியம் பிறகும் அதை மட்டும் மனதில் பதித்து கொள்ளுங்கள்... அன்று முதல் இரவு உறக்கமும் வரும், மனதில் நிம்மதியும் வரும்...

நாம் நடை போடும் பாதை கரடு முரடாக  இருந்தால் பாதங்களை காக்க காலணி  அணியவும், சேரும் சகதியுமாக இருந்தால் மேடு ஏறி  நடக்கவும் நாம் தான் சரியாக முடிவெடுக்க வேண்டும்.. தடைகளை கண்டு தயங்காமல், கடக்க வழி காணுங்கள்.. வருத்தம் மறைந்து வசந்தம் பிறக்கும்.