இயந்திர மூளையும்.. இதம் தரும் ஓய்வும்... மனசே சற்றே ரிலாக்ஸ்!

Hamridha
Jan 01, 2023,11:09 AM IST

அதீத இயந்திரங்களின் புதிய கண்டுபிடிப்புகளும் செயல்பாட்டின் வேகமும் அதிகரித்து கொண்டிருக்கும் இந்நாளிலும், அந்த  இயந்திர வேகத்துக்கு ஈடாக மனிதனும் ஓடியாக வேண்டி தான் இருக்கிறது.. நாள்தோறும் அட்டவணை இட்டாற்போல் தினசரி  செயல்பாடுகள் இருக்க, விடுமுறை நாட்கள் ஒன்றும் வினோதம் இல்லை.. அன்றும் என்ன செய்ய முடியும் என்று முன் கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது.. இந்த அட்டவணை வாழ்வில் இருந்து விலகி சில நிமிடம் நம் உள்ளத்துக்கு உற்சாகம் ஊட்டும் மனத்திருக்கு நிம்மதி ஏற்படுத்தும் செயல்களை நினைத்து பார்க்க நேரம் உண்டா நமக்கு.. இல்லைதான்.. ஆனாலும் நினைத்துப் பார்க்க நேரம் ஒதுக்கத்தான் வேண்டும்.

அப்படி ஒரு நாளில், இரு புறமும் அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்க; நடுவே அந்த மர நிழலில் ஒரு சாலை; சாலை ஓரமாய் நடைபாதை; அங்கு ஒரு நீண்ட இருக்கை, அதில் அமர்ந்து காற்று முகம் தொடும் வேளையில் லேசாக கண்களை மூடி திறக்கயில் அந்த காற்றோடு அசைந்தாடும் சாலையோர மரக்கிளைகள்.. அதான் இடையில் கண்களுக்கு புலப்படும் வகையில் சில பறவை கூடுகள்.. சற்று மேலே நிமிர கொஞ்சம் வெள்ளி போல் மின்னியும் கொஞ்சம் கருக்கல் பூசியும் மேகங்கள் அந்த சூரியனை மறைத்து நகரும் வேளையில் மனமும் லேசாகி போக, அதை பார்க்க அன்னாந்து கழுத்தை பிடித்து கொண்டே சாலை பக்கம் பார்த்தால் வேகமாக ஓடும் வாகனங்கள்..

அந்த வேகம் கண்டதும், நேரம் எவ்வளவு தூரம் ஓடியது என தெரியாமல் கைகடிகாரம் பிடித்து மணி பார்க்கையில் மீண்டும் அந்த அட்டவணை வாழ்க்கை தொடர்கிறது.. ஆனால் இந்த முறை சலிப்புடன் அல்ல பரபரப்புடனுமல்ல சின்ன புன்னகையுடன்.. லேசாகிப் போன மனசுடன்.. ரம்மியமான உற்சாகத்துடன்.. நேற்றைய அதிருப்திகளும் நாளைய பரபரப்பும் மறந்து ரசித்து அயர்ந்த இந்த நிமிடமும் நிஜம் தான்..



நம்மை சந்தோசப்படுத்தும் நிம்மதி கொடுக்கும் அரோக்கியமான சிறு விஷயங்களை முழுமையாக ரசித்து நகருங்கள், அது அந்த இயந்திரமாய் ஓடிக்கொண்டு இருக்கும் மூளைக்கு புது உத்வேகத்தை கொடுக்கும்.. அது தரும் இன்பத்தை மனசு நுகரும்போது கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு இணை அந்த சொர்க்கத்தில் கூட கிடையாது.

    கடிகார முள்ளாய் ஓடி,
    சீரான வட்டம் அடித்து,
    சுவையற்று போனது- வாழ்வு
    கண்ணாடி உடைத்து; தரையில் தாவி
    கால் பதித்து; நெஞ்சம் நிமிர்ந்து
    பயணித்து பார்; அற்புதம் பல- உணர்வாய்!!! 

நமக்கென நேரம் ஒதுக்காமல் ஓடுவதில் சுவாரசியம் இல்லை, பரபரப்பும் மன அழுத்தமும் தான் மிஞ்சும்.. நமது வாழ்க்கையை அழகாக ரசித்து; மேடு பள்ளம் கடந்து, வளைவுகளில் நெளிந்து, அருவி போல் விழுந்து மீண்டும் எழுந்து, சில இடங்களில் வேகமாகவும் சில இடங்களில் நிதானமாகவும் - பல அனுபவங்கள் கலந்து உற்சாகமாக இருப்பது எப்படி இருக்கும்!! அல்லது நேர் ரோட்டில் வெறுமையாய் ஓடி முடிப்பது எப்படி இருக்கும்!! எல்லாம் சேரும் இடம் ஒன்றாய் இருக்கலாம் அல்ல வேறாய் இருக்கலாம் ஆனால் பயணம் - அது அழகான அனுபவமும், மன நிறைவும் உள்ளதாக அமைந்தால் தான் அந்த இலக்கிற்கு மதிப்பு.. மன நிறைவுடனும் நிம்மதியுடனும் வாழ பழகுங்கள், மன அழுத்தத்துடன் அல்ல..

தினந்தோறும்  செதுக்கி வைத்தாற்போன்ற திட்டமிடப்பட்ட வாழ்வு மூச்சு முட்டுவது போல் இல்லை??
 சீரான வாழ்வு, திட்டமிடப்பட்ட நாட்கள் ஒரு விதத்தில் நல்லது தான்!! நாளைய வருங்காலம் கொண்டு வரப்போகும் சவால்களை சமாளிக்க இன்றே தயாராவது  நல்லதுதானே!

ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - அதிகப்படியான எச்சரிக்கையும் திட்டமிடுதலும்; அந்த கால நேரத்தோடு ஓடுவதிலும், உண்மை காரணமே மறந்து போகிறது.. ஆம், நாளைய நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நாம் இன்றைய நிம்மதியை தொலைத்து கொண்டு இருக்கிறோம், நம்முடைய தனித்துவத்தையும் சேர்த்து தான்.. எல்லோரும் இப்படி தானே வாழ்கிறார்கள், என்று நம்மை நாமே மாற்றி கொள்கிறோம்..

நமக்கான வாழ்வு இதை நமக்கு எற்றாற்போல் அரோக்கியமான வழியில் வாழ்வதில் தவறில்லை.. "நாளை"யை வேண்டி "இன்றை" விட்டுக்கொடுக்காமல், நம்முடைய தினசரி திட்டங்களுடன் நம்மையும் நம்முடைய மகிழ்ச்சி, மன நிறைவையும் அதனோடு சேர்த்துக்கொள்வோமே!! அதுவே மன அளவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.. நாளைக்காக இன்றை இழக்க வேண்டியதில்லை.. நாளைய பாத்துகாப்பு இன்றைய மன நிறைவை கெடுக்காத படி பார்த்துக்கொண்டாலே போதுமானது, லேசான மனதுடன் எந்நாளும் இருக்கலாம்..