வெயிட் குறைக்கணுமா.. Wait.. ஆண்களும், பெண்களும்.. தனித் தனி பிரேக்ஃபாஸ்ட் மெனு பாலோ பண்ணனுமாம்!

Su.tha Arivalagan
Oct 13, 2024,11:44 AM IST

சென்னை: தொப்பையைக் குறைக்கணும், ஸ்லிம் ஆகணும்.. இந்த ஆசை இல்லாதவங்க யாராவது இருப்பாங்களா.. நம்மில் பலருக்கும் உடம்பு வெயிட்டைக் குறைத்து நல்லா மெல்லிசா மாறி ஜம்முன்னு இருக்கணும் அப்படிங்கிற ஆசை இருக்கு. ஆனால் அதற்காக நாம் கடைப்பிடிக்கும் டயட் உணவில் சில முக்கிய  கவனம் செலுத்தணும அப்படின்னு நிபுணர்கள் சொல்றாங்க.


குறிப்பாக காலை உணவு மெனு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேற வேற மாதிரி எடுத்தக்கணுமாம். இருவரும் ஒரே மாதிரியான டயட்டை பாலோ பண்ணக் கூடாதாம். இதை ஒரு ஆய்வில் கண்டறிஞ்சு சொல்லிருக்காங்க.




நாம் பொதுவாக மூன்று வேளை உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். சிலர் இருவேளை  சாப்பிடுவார்கள். சிலர் நான்கு வேளையாக பிரித்து சாப்பிடுவதும் உண்டு.  இப்படி ஒவ்வொருவரும் ஒரு விதமான உணவுப் பழக்கவழக்கத்தைக் கடைப்பிடிக்கிறோம். ஆனால் யாராக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்று நிபுணர்களும் சரி, டாக்டர்களும் சரி கூறுகிறார்கள். காலை உணவு மிகவும் முக்கியம். இந்த காலை உணவை எடுத்துக் கொள்வதில்தான் தற்போது சிறு வேறுபாட்டை விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.


அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு விதமான டயட்டை பாலோ பண்ணனுமாம். ஆண்களைப் பொறுத்தவரை அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பிரெட், ஓட்ஸ், தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பெண்கள் கொழுப்புடன் கூடிய உணவுகள் குறிப்பாக ஆம்லேட் அல்லது அவகேடோ (தமிழில் இதை வெண்ணெய்ப் பழகம், ஆணைக் கொய்யா என்று சொல்கிறார்கள்) ஆகியறவற்றை எடுத்துக் கொள்ளலாமாம். 




இந்த மாதிரியான டயட்டை கடைப்பிடித்தால் வேகமாக எடைக் குறைப்பை சாதிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இதுகுறித்து கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஸ்டெபானி அபோ கூறுகையில், நம்முடைய உடல் நலனில் நமது வாழ்க்கை முறையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் எப்படி சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் என்பது அதில் முக்கியமாக உள்ளது.


அனைவருமே பிசியான வாழ்க்கையை வாழ்கிறோம். என்ன செய்கிறோம், என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம். எனவே நமது உணவில் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும். குறிப்பாக பிரேக்ஃபாஸ்ட்டில் அதிக கவனம் செலுத்தினால் ஒட்டுமொத்த உடல் எடையும், உடல் நலனும் கட்டுக்குள் கொண்டு வருவது எளிதாக இருக்கும். உடல் எடையைக் குறைப்பதாக இருந்தாலும் சரி, எடையை பராமரிப்பதாக இருந்தாலும் சரி, நமது டயட் அட்டவணை மிக முக்கியம். அப்படி இல்லாமல் குருட்டாம்போக்கில் எது செய்தாலும் அது உரிய பலனைத் தராது என்றார்.




இந்த ஆய்வில் தெரிய வந்த முக்கியமான விஷயம் இதுதான்.. பெண்களைப் பொறுத்தவரை அவர்களது உடலில் கொழுப்பு எளிதாக சேரும். அதேசமயம், ஆண்களை விட வேகமாக கொழுப்பைக் கரைத்து விடுவது பெண்கள்தான். இதனால்தான் பெண்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆண்களின் உடலைப் பொறுத்தவரை கொழுப்பு கரைவது பெண்களை விட மெதுவாக நடக்கிறது என்பதால் அவர்கள் அதைக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.


ஸோ, இனிமே பார்த்து சாப்பிடுங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்