மனதில் சுழலும் நினைவுகள்.. வரமா, சாபமா?
- சண்முகப்பிரியா
நினைவுகள்.. இது ஒரு வரம் என்றும் சொல்லலாம்.. அதேசமயம், இன்னொரு பக்கம், இதை சாபம் என்றும் சொல்லலாம். காரணம் நினைவுகள் எந்த அளவுக்கு நமக்குள் பசுமையை நிரப்புகிறதோ அதே அளவுக்கு வெப்பத்தையும் மூட்டி நம்மை தகிக்க வைக்கவும் தவறுவதில்லை.
முதலில் வரம் பற்றி பகிரலாம். வரம் என்று சொல்லும் போதே அது மீண்டும் தொடராதா? என்ற ஏக்கம் மனதில் நிறைய இருக்கும். அப்படிப்பட்ட வரம் கொடுத்த நபர்கள், நிகழ்வுகள், அது அப்படியே மீண்டும் தொடராதா? என்று தான் தோன்றும். அந்த அளவுக்கு நினைவுகள் ஒரு வரம்.
இந்த நினைவுகள் ஒருவரை எவ்வளவு தூரம் கூட கொண்டு செல்லும். சில நேரங்களில் இந்த நினைவுகள் நமக்கு ஒரு ஊக்கம் தரும். அந்த ஊக்கம் போல வேறு எவரின் வார்த்தைகளும் தராது. சில நேரங்களில் நாம் மிஸ் செய்தவர்கள் நம்முடன் இல்லை என்று மனதை தேற்றவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். அவர்களின் இடத்தில் வேறு யாரையும் நிரப்பவும் மனம் வராது. அந்த வேதனையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது.
சில நேரங்களில் அந்த வேதனையை நம் மனதில் புதைத்து கொண்டு ஒரு நடை பிணமாக வாழும் உள்ளங்களுக்கு தான் தெரியும், அந்த வேதனையை மறைக்க அவர்கள் படும் கஷ்டம் எல்லாம். சில நேரங்களில் உன் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் சந்தோஷமும் வேறு தான். ஒவ்வொரு நொடியும் நீ என்னோடு இல்லை என்றாலும் உன் நினைவுகளுடன் நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன். அது தரும் ஒரு அரவணைப்பை வேறு எதிலும் நான் உணர்ந்தது இல்லை. நீ என்னை விட்டு சென்றால் என்ன உன் நினைவுகளுடன் தினமும் நான் கை கோர்த்து கொண்டு பயணம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். இந்த பயணம் என் கடைசி இதயத் துடிப்பு வரை இருக்கும். யாரிடம் போய் சொல்ல முடியும் உனக்கும் எனக்கும் உள்ள நினைவுகளின் உறவை. நீ எங்கேயோ இருந்து என் இன்ப துன்ப நிலைகளை பார்த்து கொண்டு இருக்கின்றாய் என்று நம்புகிறேன் நான். பார்த்து கொண்டு இருக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு சூழலில் என்னை நீ உணருவாய் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது எனக்குள்.
நான் நடந்து செல்லும் பாதையில் உன் சாயலில் யாரை பார்த்தாலும் நீயாக இருந்து விட கூடாதா? என்ற ஏக்கம் மனதில் தோன்றும். உன் கைப் பிடித்துக் கொண்டு இருந்த எனக்கு இன்று நீ இல்லாத இந்த தனிமை மரக்கிளைகளில் இலைகள் உதிர்த்த கிளைகள் போன்று நான் இருப்பதை உன்னிடம் எப்படி பகிர முடியும்? நான் உன்னை இப்படி எல்லாம் நினைத்து கொண்டு இருப்பதை உன்னிடம் எப்படி சொல்வது? நான் காற்றிடம் சொன்னால் உன்னிடம் வந்து சொல்லுமா? என் இதய துடிப்பு உன் பெயரை சொல்லி கொண்டு இருக்கிறது அந்த துடிப்பை தூதாக அனுப்பி வைக்கவா? என்ன அனுப்பலாம் என்ற யோசனை எனக்குள் ஓடும்.
நீ ஏன் எனக்கு இந்த சுகமான நினைவுகளை தந்தாய்? நீ கொடுத்ததால் அந்த நினைவு எனக்கு ஒரு சுகமாக தான் இருக்கும். உன் நினைவுகளில் உரையாடி உனக்குள் கலந்து நான் அடையும் இன்பம் வேறு. அது தரும் ஆறுதல் வேறு எதிலும் இல்லை. உன் நினைவுகளில் உரையாடி கொண்டு இருக்கும் போது நாம் சென்ற இடமெல்லாம் நினைத்து கொள்வேன் அங்கு மீண்டும் சென்று நீ உச்சரித்த வார்த்தைகள் எல்லாம் காற்றில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இது ஒரு சுகமான வலி. நீ தந்ததால்.உன் நினைவுகளோடு நான் உரையாடல் செய்வது மிகவும் பிடித்த ஒன்று எனக்கு. அதில் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு. உன்னோடு பேசவில்லை என்றாலும் கூட என் மனதில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் உன்னிடம் சொல்லிவிடுவேன். அதற்கு சிறிது தனிமை போதும். இப்போது எல்லாம் தனிமைக்கு கூட என்னை பிடித்து விட்டது. நான் உன்னிடம் பகிர்ந்து கொள்ளும் அன்பை பார்த்து காற்றுக்கும் கூட என் மீது சிறிது பொறாமை தான்.
நினைவுகள் சுகமானவைதான்.. கூடவே வலியும் நிரம்பியதும் கூட.