Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பிற்கு என்ன காரணம் ? இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள்? இந்த திடீர் சந்திப்பின் நோக்கம் என்ன? என மீடியாக்களில் பல வகையான பேச்சுக்கள் உலா வர துவங்கி விட்டது. உண்மையில் இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது பற்றி சீமானே பேட்டி ஒன்றில் விளக்கமாக பதிலளித்து விட்டார்.
புதிய தலைமுறை டிவி.,க்கு சீமான் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ரஜினியை சந்தித்தது அரசியல் தான். அரசியல் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது. ரஜினியை சந்திக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். தற்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. ரஜினியுடன் அரசியல், சினிமா என பல தரப்பட்ட விஷயங்களை பேசினேன். அவருடன் பேசிய விஷயங்கள் அனைத்தையும் வெளியில் பகிர முடியாது. அரசியல் கொடூரமான ஆட்டம் என ரஜினி, கமலிடம் ஏற்கனவே சொன்னேன். அரசியலுக்கு வந்தால் ஏச்சு, பேச்சுக்களை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றேன். ரஜினி சிஸ்டம் சரியில்லை என்றார். அதையே தான் அமைப்பு சரியில்லை என நாங்கள் கூறுகிறோம்.
ரஜினியுடன் அரசியல் பேசினேன் - சீமான்
தற்போது தலைவர்கள் உருவாவது கிடையாது. தலைவன் என்பவன் பசி, துயரம் ஆகியவற்றை தாங்கி அடித்தட்டில் இருந்து ஒருவன் தலைவனாக உயர்ந்து வர வேண்டும். இன்று தலைவர் உருவாவது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள். அப்படி உருவாக்கப்படும் தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கஷ்டங்கள் தெரியாது. திமுக.,விற்கு எதிராக பேசினாலே அவர்களை சங்கிகள் என்கிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று பொருள். அப்படி திமுக.,வை எதிர்ப்பதால் எங்களை சங்கிகள் என்கிறார்கள் என்றால் அது எங்களுக்கு பெருமை தான்.
காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் இன்று அரசியல் களத்தில் கிடையாது. ஓட்டுக்கள் பெறப்பட வேண்டும். ஆனால் இங்கு வாங்கப்படுகிறது. நல்லாட்சி ஆளித்தால் காசு கொடுத்து ஓட்டுக்களை வாங்கும் நிலை இருக்காது என கூறி உள்ளார்.
சிங்கம் கழுகு கூட்டணி.. சாட்டை துரைமுருகன் போட்ட டிவீட்
சீமான் இப்படி கூறி இருந்தாலும், சிங்கமும் - கழுகும் கூட்டணி அமைத்து விட்டதாக சோஷியல் மீடியாக்கள் பலரும் கூறி வருகிறார்கள். அவ்வளவு ஏன்? பிரபல அரசியல் விமர்சகரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சிங்கம்-கழுகு ஒன்றாக உள்ளதாக போட்டோவே போட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார். கழுகு என்பது ரஜினிகாந்த்தைக் குறிக்கும். சிங்கமாக சீமானை அவர் வர்ணித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில நாட்களாகவே நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். இதனால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் விஜய் கட்சி துவங்கி, மக்களின் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளதால் சீமான் கடும் எரிச்சல் அடைந்தள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட குழப்பமான சூழலில் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைக்கவும், சினிமா + அரசியல் ரீதியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பவும் சீமான் முயல்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு அடித்தளமாக தான் சீமான், திடீரென சென்று ரஜினியை சந்தித்து விட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினி ரசிகர்களை ஈர்க்கும் திட்டமா
சினிமாவில் விஜய்க்கு நிகரான செல்வாக்கு பெற்றவர் ரஜினி தான். உண்மையில் ரஜினியின் செல்வாக்கையே சவாலுக்குள்ளக்கியவர் விஜய்தான். இதனால் ரஜினி ரசிகர்கள் அவர் மீது கடும் காட்டமாக உள்ளனர். இந்த நேரத்தில் ரஜினியை சந்தித்தால், விஜய் மீது ஆத்திரத்தில் உள்ள ரஜினி ரசிகர்களில் கணிசமானவர்கள் தங்கள் பக்கம் ஈர்க்க முடியும், விஜய்க்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்த முடியும் என்பது சீமானின் திட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு தங்கள் கட்சியை பலமானதாக மாற்றி, அதிமுக, திமுக, தவெக பல கட்சிகளுக்கும் டஃப் கொடுக்கும் சீமான் மாஸ்டர் பிளானில் ஒன்றாகவும் இதைக் கருதுகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த்தை கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவர்தான் சீமான். எனவே ரஜனி ரசிகர்கள் மடை மாறி சீமான் பக்கம் வருவார்களா என்பது கேள்விக்குறியே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்