மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!
சென்னை: ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஜாலியாக கீரை ஆய்ந்து கொண்டிருக்கிறார். அப்படியே சூப்பராக ஒரு பாடலையும் பாடிய படி கீரை ஆய்கிறார்.. சும்மா சொல்லக் கூடாது.. எஸ்.ஜானகி பாடிய ஒரிஜினல் பாட்டையே தோற்கடித்து விட்டது இந்தப் பெண்ணின் இயல்பான குரலும், அவரது குரல் வளமும்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. என்ற வரிகளுக்கு ஏற்ப நம் நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பி உள்ளன. அதேபோல் ஒவ்வொரு மனிதரிடமும் பல திறமைகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை வெளியே கொண்டு வருவதற்கு சாதகமான சூழ்நிலை அமையாததாலும் பல்வேறு காரணத்தினாலும் பல திறமைகள் வெளியிலேயே வராமல் புதைந்து கிடக்கின்றன.
பொதுவாக நம் வீட்டில் பெற்றோர்கள் பெண் பிள்ளைகள் என்றால் எதிர்காலத்தில் திருமணம் செய்து போகும் வீட்டிற்கு சமைத்து போட கண்டிப்பாக சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் .அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம் என கூறி சமையலில்தான் பெண் பிள்ளைகளை அதிகம் ஈடுபடுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறி பெண் பிள்ளைகளுக்கு கல்வி, அறிவு முக்கியம் என சொல்லும் அளவுக்கு நாகரீக வளர்ச்சி மாறி உள்ளது. இது மட்டுமல்லாமல் பெண் குழந்தைகள் தங்களை தாமே பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலைகள் தேவை என பல்வேறு தரப்பிலும் கூறி வருகின்றனர். இருந்தாலும் கூட ஒவ்வொருவர் வீட்டிலும் நம் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும். அவர்களுக்குள் என்ன திறமை ஒளிந்து இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை.
தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் சாதித்துக் கொண்டு தான் வருகின்றனர். அப்படியும் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எத்தனையோ பெண்கள் கனவுகளுடன் ஏக்கங்களுடனும் தனக்குள்ளையே திறமைகளை மூடி மறைத்துக் கொண்டு வெளியே காட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்குள் இருக்கும் தேவையற்ற அச்சமும் கூச்சத்தினாலும் தங்களின் திறமைகளை வெளிக்காட்டாமல் இருந்து விடுகின்றனர்.
இதனைப் போக்க பெண்கள் முதலில் என்ன செய்ய வேண்டும். முதலில் பெண்களுக்குள் ஏற்படும் பயத்தையும் அச்சத்தையும் தூக்கி எறிய வேண்டும். பின்னர் பெண்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிக்காட்ட எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை எல்லாம் தவிடு பொடியாக்கி நம்மை நாமே மெருகேற்றிக் கொண்டு தனங்களுக்குள் உள்ள தனித்திறமைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வர வேண்டும். அப்படி தைரியமாக தன்னம்பிக்கையுடன் இருக்கும் பெண்களே இந்த உலகில் வெற்றி என்ற கேடயத்தை பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் ஒரு சாதாரண கிராமத்தில் உள்ள பெண்ணுக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா என அனைவரும் வியக்கும் பாராட்டும் அளவிற்கு இந்த கீரை ஆயும் பெண்ணின் பாடல் வைரலாகி வருகிறது. அவர் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்கிறார். அப்படியே பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார். சின்னக் கவுண்டர் படத்தில் இடம் பெற்ற கூண்டுக்குள்ள என்ன வச்சு என்ற பாடலைத்தான் பாடுகிறார். எஸ். ஜானகி பாடிய அந்தப் பாடலை அப்படியே அட்டகாசமாக இந்தப் பெண் பாடுகிறார். இதில் என்ன விசேஷம் என்றால் சூப்பராக Breath கொடுத்து, துல்லியமாக பிசிறே இல்லாமல் பாடியிருக்கிறார்.
மாமா மாமா உன்னைத்தானே என்று அவர் பாடும்போது அவ்வளவு feel கொடுக்கிறார். எஸ். ஜானகி கூட இப்படி கொடுக்கலை போங்க.. அவ்வளவு தத்ரூபம்! மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் நல்ல குரல் வளத்துடன் சிறு தயக்கம் கூட ஏற்படாமல் பாடி அசத்தியுள்ளார். இவ்வளவு திறமை உள்ள அந்தப் பெண் சாதாரணமாக தன் வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி கீரையை அறிந்து கொண்டே எந்த ஒரு மியூசிக் இன்ஸ்ட்ருமென்டும் இல்லாமல் நல்ல குரல் வளத்துடன் பாடல் பாடும் அழகை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது போன்ற அடையாளமே தெரியாத எத்தனையோ திறமைகள் கிராமங்களிலும் வீடுகளிலும் முடங்கிப் போய் உள்ளன. இதேபோன்று இந்த பெண்ணின் திறமையும் மறைந்து விடாமல் இந்த திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு கௌரவமாக இருக்கும். பெரிய பெரிய இசையமைப்பாளர்களின் கடைக்கண் பார்வை இந்த பெண்ணின் மீதும்பட்டால் பெரிய அளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீங்களும் அந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்க
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்