ராமோஜி பிலிம் சிட்டி, ஈடிவி பாரத் நிறுவனர், திரைப்படத் தயாரிப்பாளர்.. மறைந்தார் ராமோஜி ராவ்!

Su.tha Arivalagan
Jun 08, 2024,09:04 AM IST

ஹைதராபாத்: ராமோஜி பிலிம் சிட்டி, ஈடிவி பாரத் உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்களை நடத்தி வரும் ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார். அவருக்கு வயது 87.


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.


நாட்டின் மிகச் சிறந்த தொழில் முனைவோர்களில் ராமோஜி ராவுக்கும் தனி இடம் உண்டு. ராமோஜி குழுமத்தை நிறுவி அதன் மூலம் ராமோஜி பிலிம் சிட்டி, ஈநாடு செய்தித் தாள், ஈடிவி நெட்வொர்க் டிவி சானல்கள், ஈடிவி பாரத் இணையதளங்கள், உஷா கிரண் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை ராமோஜி ராவ் நிறுவினார்.




கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் ராமோஜி ராவ். இந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது உடல் ராமோஜி பிலிம் சிட்டியில் பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராமோஜி ராவ் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


1936ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிறந்த ராமோஜி ராவ், ஈநாடு நாளிதழை 1974ம் ஆண்டு தொடங்கினார். தெலுங்கின் மிகப் பெரிய நாளிதழ் இது. பின்னர் ராமோஜி பிலிம் சிட்டி, ஈடிவி பாரத் டிஜிட்டல் உள்ளிட்ட பலவற்றை தொடங்கினார் ராமோஜி ராவ். தனது படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், டெலிபிலிம்களை தயாரித்துள்ளார். பத்மவிபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்பட நகரமாக ராமோஜி பிலிம் சிட்டி திகழ்கிறது. அங்குதான் பாகுபலி படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் ராமோஜி பிலிம் சிட்டி திகழ்கிறது. இந்த பிலிம் சிட்டியின் வளாகத்திற்குள்தான் ராமோஜி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ராமோஜி ராவின் இல்லமும் இதே வளாகத்திற்குள்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.