நாம் தமிழருக்குக் கிடைக்காமல் கை நழுவிய தீப்பெட்டிச் சின்னம்.. மதிமுக கைக்கு வந்து சேர்ந்தது!

Su.tha Arivalagan
Mar 30, 2024,06:32 PM IST

திருச்சி: நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தும் கூட கிடைக்காத தீப்பெட்டிச் சின்னம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது


மதிமுகவுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தீப்பட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்சி திருச்சியில் மட்டும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு அது ஆரம்பத்திலிருந்து போட்டியிட்டு வந்த பம்பரம் சின்னம் இந்த முறை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சட்ட போராட்டங்களிலும் மதிமுக ஈடுபட்டது. இருப்பினும் சின்னம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த நிலையில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.




அந்த வகையில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துறை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டார். இதன் மூலம் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக இந்த தொகுதியில் போட்டியிட உள்ளது. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அந்த சின்னத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்ச ரகுபதி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தா.


மதிமுக முதல்முறையாக வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாம் தமிழர் கட்சி இதே தீப்பெட்டி சின்னத்தை தான் முன்பு கோரி இருந்தது. தீப்பெட்டி சின்னம் அல்லது கப்பல் ஆகியவற்றில் ஒன்றை கொடுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீமான் கூட தீக்குச்சியை வைத்து நாடு முழுவதும் விழிப்புணர்வை பற்ற வைக்க ஆர்வத்துடன் காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கப்படவில்லை என்று ஆதங்கமாக தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் சீமான் கைக்கு வராமல் நழுவிய தீப்பெட்டி தற்போது துரை வைகோவின் கையில் வந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.