875 தமிழக மீனவர்கள் கொலை.. அவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?.. ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

Meenakshi
Aug 06, 2024,03:46 PM IST

டெல்லி: கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.


சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு தமிழக மீனவர்களின் படகு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக மீனவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சினை எழுப்பினார்.  அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இன்றைக்கும் இலங்கை கடற்படையினரால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பிரதமரை சந்தித்தேன். அப்போது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கவலை வேண்டாம் என தெரிவித்திருந்தார். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.