கவனிக்காத பிள்ளைகள்.. சிலிண்டரை வெடிக்க வைத்த டாக்டர்.. மனைவி பலி.. மயிலாடுதுறையில் கொடுமை
Jan 30, 2025,08:35 PM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், வயதான தங்களை பிள்ளைகள் சரியாக பார்த்துக் கொள்ளாததால் வேதனை அடைந்த ஹோமியோபதி டாக்டர் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர் உயிருக்குப் போராடி வருகிறார்.
மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் இளங்கோவன். இவருக்கு வயது 69. இவரது மனைவி செந்தாமரை (வயது-59). இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன், கீழ் வீட்டில் வசித்து வருகிறார். மேல் வீட்டில் இளங்கோவன் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செந்தாமரை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் அவதிப்பட்டுள்ளார். இவர்களது மகன் மற்றும் மகள்கள் யாரும் இவர்களை கவனிக்காமல் இருந்துள்ளனர். பிள்ளைகள் சரிவர பார்த்துக் கொள்ளாததாலும், நோயால் அவதிப்பட்டு வந்ததாலும் வேதனை அடைந்த இளங்கோவன் தம்பதி தற்கொலை மூலம் உயிரை நீக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து வீட்டில் இருந்த சிலிண்டரை வெடிக்க வைத்துள்ளார் இளங்கோவன். இதில் அவரது மனைவி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இளங்கோவன் உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தார். விரைந்து வந்த போலீஸார் தீயை அணைத்து விட்டு வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, மனைவியின் மடி மீது தலை வைத்தபடி தீயில் உடலின் முக்கால்வாசிப் பாகங்கள் கருகிய நிலையில் போராடிக் கொண்டிருந்தார் இளங்கோவன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்