பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக.. தம்பி மகன் ஆகாஷ் ஆனந்த்தை நியமித்தார் மாயாவதி!
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக தனது தம்பி மகன் ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்துள்ளார் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி.
ஒரு காலத்தில் மாயாவதி தேசிய அளவில் மிகப் பிரபலமாக திகழ்ந்த தலித் தலைவர். தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களில், தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாயாவதி. சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக, உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாமல் ஹிந்தி பெல்ட் மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர்.
ஆனால் காலத்தின் கோலமாய் இன்று நலிவடைந்த நிலையில் அவரும் இருக்கிறார், அவரது கட்சியும் இருக்கிறது. உத்தரப் பிரதேச அரசியலில் அசைக்க முடியாத சக்தியாய் திகழ்ந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி இன்று பெரிய அளவில் சோபிக்க முடியாம் முடங்கிப் போயிருக்கிறது. மாயாவதியைச் சுற்றி வட்டமிட்டு நிற்கும் பல்வேறு வழக்குகளும் கூட இதற்குக் காரணம். இதனால்தான் அவர் யாருடனும் சேரவும் முடியாமல், கூட்டணியும் வைக்க முடியாமல், தேர்தல்களில் வெல்லவும் முடியாமல் முடங்கக் காரணம்.
இந்த நிலையில் தனது அரசியல் வாரிசாக தனது தம்பி ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்து அவரை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக அறிவித்துள்ளார் மாயாவதி. இதற்கு முன்பு ஆகாஷ் ஆனந்த் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். 2017ம் ஆண்டு முதல் கட்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார் ஆகாஷ் ஆனந்த். அவரை திட்டமிட்டு வளர்த்து வந்தார் மாயாவதி.
இந்த நிலையில் நலிவடைந்த நிலையில் உள்ள கட்சியை வளர்க்கவும், இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையிலும் கட்சியை ஆகாஷ் ஆனந்த் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மாயாவதி தொடங்கியுள்ளார். இன்று லக்னோவில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதேசமயம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலப் பொறுப்புகளை மட்டும் தானே பார்த்துக் கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார். இந்த இரு மாநிலங்களைத் தவிர்த்து நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக ஆகாஷ் ஆனந்த் செயல்படுவார்.
ஆகாஷ் ஆனந்த் எம்.பி.ஏ. படித்துள்ளார். 28 வயதுதான் ஆகிறது. இவரது தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி எந்த அளவுக்கு உயிர்த்தெழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.