பாலமேடு ஜல்லிக்கட்டு.. துள்ளி வந்த காளைகள்.. பாய்ந்து அடக்கும் காளையர்கள்.. கோலாகலம்!

Su.tha Arivalagan
Jan 16, 2024,09:14 AM IST
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடந்து வரும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. முதலில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட  கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.




சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். அதேபோல அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த மாடு பிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பரிசு வழங்குகிறார். பலத்த பாதுகாப்புடன் போட்டி நடந்து வருகிறது.

ஒவ்வொரு காளையைப் பிடிக்கும் வீரருக்கும் சைக்கிள், பீரோ, சேர், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல பிடிபடாத மாடுகளுக்கும் பரிசு அளிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே இன்றைய ஜல்லிக்கட்டும் கோலாகலமாக பட்டையைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர்.