மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்
சென்னை: சென்னையில் நேற்று லட்சக்கணக்கானோர் கூடிய விமான சாகச கண்காட்சி முடிந்து அதன் பின்னர் 5 பேரின் உயிரிழப்பு பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் மதுரையில் இன்று கிட்டத்தட்ட 20,000 பேருக்கு மேல் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றுள்ளது.
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தலைமையில் நடந்த இந்த பேரணியால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பேரணி, மக்களுக்காக, மக்களால் நடத்தப்பட்ட ஊர்வலமாகும். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக நடந்த ஊர்வலம் இது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கூறுகையில், வீட்டுமனைப் பட்டா கோரி 20,000 பேர் பங்கெடுத்த மாபெரும் மக்கள் முறையீட்டு இயக்கம். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கில் பல பத்தாண்டுகளாக வசித்து வருகின்ற எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்.
2011 ஆண்டு மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிப் பகுதியில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானோருக்கு அரசு அனுமந்த பட்டா கொடுத்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தோராயப்பட்டா கொடுத்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குடிசை மாற்றுவாரியம், நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பின்பும் அவர்களின் பெயரில் பத்திரம் பதிந்து கொடுக்காத நிலை உள்ளது.
மேற்கண்ட நிலையில் உள்ள மக்களுக்கு பட்டா மற்றும் பத்திரம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தந்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்களின் சார்பில் சுமார் 20,000 மக்கள் பட்டா கேட்டு முறையீடு இயக்கம் இன்று நடைபெற்றது.
எனது தலைமையில் நடைபெற்ற இம்மாபெரும் நிகழ்வை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் துவக்கி வைத்தார். மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலகுழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். கே. பொன்னுத்தாய், எஸ். பாலா , துணை மேயர் தி. நாகராஜன் , பட்டா இயக்க பொறுப்பாளர் வை. ஸ்டாலின் உள்ளிட்ட மாநகர் , புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி குழு செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுத்தனர்.
இறுதியில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாநகராட்சி மக்களின் பட்டா பிரச்சனை குறித்த முறையீட்டை முன்வைத்தோம். அவர் தமிழக அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்று உரிய தீர்வைக் காணுவதாக உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் சு. வெங்கடேசன்.
வீட்டு மனை பட்டா கோரி , மக்களை இப்படி கடும் வெயிலில் ஊர்வலமாக வர வைக்கும் அளவுக்கு இல்லாமல், துரித கதியில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்