மாருதி கார் வாங்கப் போறீங்களா.. லேட்டஸ்ட் விலையை பார்த்துட்டுப் போங்க.. லைட்டா ஏத்திருக்காங்க!

Su.tha Arivalagan
Jan 16, 2024,03:02 PM IST
பெங்களூரு: மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது அனைத்து வகை கார்களின் விலையையும் லேசாக ஏர்றியுள்ளது. கடந்த  ஆண்டு ஜனவரி மாதத்தை விட இது குறைவுதான்.  அதாவது 0.45 சதவீத அளவுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதால் ஜனவரி மாதம் விலை உயர்வு இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது மாருதி நிறுவனம். இந்த நிலையில் தற்போது விலை உயர்வை அதிகரித்துள்ளது.  சிறிய ரக கார் பிரிவில் மாருதி கார்களின் விற்பனை சரிவில் உள்ளது. இதனால் கார்ச் சந்தையில் மாருதி கார்களின் விற்பனை மந்தமாகவே உள்ளது.

இந்த நிலையில் தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது மாருதி. இதனால் கார் விற்பனை மேலும் மந்தமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதால், விலை உயர்வைத் தவிர்க்க இயலவில்லை என்று மாருதி தரப்பு சொல்கிறது. 



மாருதி தவிர மற்ற கார் தயாரிப்பாளர்களும் கூட தங்களது பிராண்டுகளின் விலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.  இது நிதியாண்டின் கடைசி மாதங்கள் என்பதால் ஸ்டாக் கிளியரன்ஸிலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

மாருதியைப் பொறுத்தவரை அதன் ஆல்டோ மற்றும் செலரியோ கார்களின் விற்பனையானது கடந்த டிசம்பரில் 29 சதவீதம் சரிந்திருந்தது.  மாருதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையானது ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8.5 சதவீத உயர்வைக் கண்டிருந்தது. ஆனால் இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் குறைவாகும்.