Maruti car price hike: மாருதி கார்களின் விலை கிடுகிடுவென உயர்வு.. ஜனவரி முதல்!
டெல்லி: மாருதி நிறுவனம் தனது எர்டிகா, பிரஸ்ஸா, டிசைர், பிராங்க்ஸ், ஸ்விப்ட் உள்ளிட்ட கார்களின் விலையை வருகிற ஜனவரி முதல் தேதியிலிருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கார் மாடல்களுக்கேற்ப விலை உயர்வு இருக்கும் என்றும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம்தான் மாருதி சுசுகி இந்தியா. மாருதி கார்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற கார் என்ற பெயர் வாங்கிய நிறுவனம் மாருதி சுசுகி. அதேசமயம், சர்வீஸ் மையங்களும் எளிதாக கிடைக்கும் வகையில் உள்ள ஒரு நிறுவனமும் கூட.
இந்த நிலையில் 2025ம் ஆண்டு பிறக்கவுள்ளதைத் தொடர்ந்து கார்களின் விலையையும் உயர்த்தியுள்ளது மாருதி நிறுவனம். 4 சதவீத அளவுக்கு தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தயாரிப்பு மற்றும் நடைமுறை செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மாடல் வாரியாக என்ன விலை உயர்வு என்பதை அது அறிவிக்கவில்லை. அதேசமயம், மாடல்களுக்கேற்ப விலை உயர்வு இருக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளது.
மாருதி கார்கள் அனைத்துமே நெக்ஸா மற்றும் ஏரினா ஸ்டோர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நெக்ஸா ஸ்டோர்களில் இக்னிஸ், பலேனோ, பிராங்க்ஸ், கிரான்ட் விட்டாரா, ஜிம்னி, எக்எல்6, இன்விக்டோ ஆகிய கார்கள் விற்கப்படுகின்றன. ஏரினா மூலம், ஆல்டோ கே10, எஸ் பிரஸ்ஸோ, செலியோ, ஈகோ, வேகன் ஆர், ஸ்விப்ட், டிசைர், பிரஸ்ஸா, எர்டிகா ஆகிய கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாருதி மட்டுமல்லாமல், ஹூன்டாய் நிறுவனமும் தனது கார்களின் விலை ஜனவரி 1 முதல் ரூ. 25,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மேலும் நிஸ்ஸான், மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய நிறுவனங்களும் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவிக்கவுள்ளன.
அடுத்த ஆண்டு ஒரு கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றமான செய்திதான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்