மருதாணி செவப்பு செவப்பு… மகாராணி சிரிப்பு சிரிப்பு.. பறிங்க.. அரைங்க.. பூசுங்க.. வெயிலாவது ஒன்னாவது!
- பொன் லட்சுமி
அண்ணாத்த படத்துல ஒரு பாட்டு வரும்... "மருதாணி செவப்பு செவப்பு… மகாராணி சிரிப்பு சிரிப்பு".. மருதாணியை வச்சு எத்தனை பாட்டு.. லிஸ்ட் போட்டா கையெல்லாம் சிவந்து போகும்..எழுதி எழுதி... மருதாணி வச்சு செவப்பது போல.. அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததுதாங்க இந்த மருதாணி.
கிராமங்களில் பிறந்தவர்களின் சிறு வயது நினைவுகளில் மருதாணிக்கு தனி இடம் உண்டு.. மருதாணியைத் தாண்டாமல் எந்த கிராமத்துப் பொண்ணும் வளர்ந்து ஆளாகாவே முடியாது.. அந்த அளவுக்கு கிராமத்து வாழ்க்கையில் மருதாணிக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. மருதாமி என்றாலே அழகுக்காக கைகளில் வைப்பது தான்... ஆனால் அதில் அழகு மட்டுமல்ல, பல்வேறு வகையான மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கின்றன... அதனால்தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷேசத்துக்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்
மருதாணிக்குப் பின்னால் ஆச்சரியமூட்டும் நன்மைகளும் ஆன்மீக முக்கியத்துவமும் உள்ளது .. இதோ மருதாணியின் பயன்கள்... வாங்க பார்க்கலாம்.
அழகு கலையில் மருதாணி :-
மருதாணி வைத்துக் கொள்வது எவ்வளவு நல்லதோ அதேபோல வீட்டில் மருதாணி மரம் வளர்ப்பதும் அவ்வளவு சிறப்பான பலனை தரும்.. அந்த காலத்தில் கிராமப்புறத்தில் மருதாணி மரம் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.. சிறுவயதாக இருக்கும் போது எங்கள் வீட்டில் மருதாணி மரம் இருந்தது.. ஊரில் கோவில் கொடை ஆரம்பித்தால் போதும் பக்கத்து வீட்டு சிறுமிகள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொடை ஆரம்பிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே இலைகளை பறித்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து மை போல அரைத்து இரவில் படுக்க செல்லும் முன்பு வைத்துக் கொள்வோம்.. அதிலும் மருதாணியை யார் அரைப்பது என்று அவ்வளவு சண்டை போடுவோம்.. ஏன்னா அம்மியில் தான் அரைக்க வேண்டும். அரைக்கும் போதே ஓரளவு கைகளில் சிவந்து விடும்.
பின் மருதாணி வைத்தாலும் அந்த அளவு சிகப்பு தெரியாது .. அதனால் அம்மா தான் அரைத்து தருவார்.. பின் காலையில் தூங்கி முழித்ததும் யார் கையில் உள்ள மருதாணி சிகப்பு நிறத்தில் இருக்கிறது என்று பார்க்க அவ்வளவு ஆவலாக இருக்கும்.. எனக்கு தான் சிகப்பு கலர் வந்து இருக்கு உனக்கு ஆரஞ்சு கலர் வந்து இருக்கு உனக்கு கருப்பு கலர் வந்திருக்கு அப்படின்னு சொல்லி மகிழ்வோம்.. அதுக்கு ஆளாளாக்கு ஏதாவது காரணத்தைச் சொல்லி சிரித்துக் கொள்வோம். அதிலும் இரவில் மருதாணி வைத்துக்கொண்டு படுத்துவிட்டு காலையில் தூங்கி முழித்து பார்க்கும் போது கையில் மட்டும் சிவந்து இருக்காது, ஆடைகளிலும் முகத்திலும் ஆங்காங்கே மருதாணி ஒட்டி சிவந்து இருக்கும்... அதைப் பார்த்துவிட்டு நண்பர்கள் சிரிக்கும்போது அவ்வளவு கடுப்பா இருக்கும்.
ஆனால் இன்று அதை நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.. கூடவே அதெல்லாம் அந்தக் காலம் என்று ஏக்கமும் வந்து போகும்.. இந்த மருதாணியை வைக்கும் போது உடம்பு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்.. கைகளில் நக பூச்சி (நகச்சுற்று) உள்ளவர்கள் வைத்துக் கொண்டால் விரைவில் குணமாகிவிடும்... அதிக அளவு உடல் உஷ்ணம் உடையவர்கள் வைக்கும் போது உடல் சூட்டை உடனடியாக குறைக்கும்.. மருதாணி சிவந்திருக்கும் கலரை பார்த்து எங்க பாட்டி சொல்லுவாங்க சரியாக சிவக்காமல் மஞ்சள் கலராக இருந்தால் அது சீதள உடம்பு என்றும், அதிகளவு கருத்து இருந்தால் அது பித்த உடம்பை குறிக்கும் என்றும், அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்.. அதுதான் பாட்டி வைத்தியம்!
ஆரோக்கியத்தில் மருதாணி :-
மருதாணி இலை கண்ணுக்கு தெரியாத கிருமிகளையும் கூட அழிக்கும் வல்லமை கொண்டது.. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிக்கடி மருதாணி வைத்துக் கொண்டால் நகசுத்தி வராமல் தடுக்கலாம்.. சொறி சிரங்கு படை போன்ற நோய்களுக்கும் மருதாணி இலையை அரைத்து பூசலாம்...
தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணி பூவை பறித்து ஒரு துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்தால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும்.. பெண்களுக்கு ஏற்படும் மேக நோய் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.. இதன் இலையோடு பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்து விழுதாக அரைத்து உருண்டையாக எடுத்து வாயில் போட்டு வெறும் வயிற்றில் பால் அருந்தி வந்தால் விரைவில் குணமாகும்.. இள நரை பித்தநரை போன்றவற்றிற்கு மருதாணி இலையை அரைத்து காய வைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு முடிக்கு தேய்த்து வந்தால் முடி கருகருவென நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்..
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருதாணி செடி அன்று ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது... ஆனால் இன்று கிராமப்புறங்களில் கூட ஒரு சில வீடுகளில் மட்டும் தான் காண முடிகிறது... இந்தச் செடியில் வேரிலிருந்து நுனி வரை அனைத்து பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்தது... மருதாணி இலையை வைக்கும் போது மனமும் உடலும் சேர்ந்து குளிர்ச்சியானது.
மகாலட்சுமியின் அம்சம்:-
அழகிற்காக மட்டும் இந்த செடி வளர்க்கப்படுவதில்லை, மகாலட்சுமியின் அம்சமாகவும் தான் வளர்க்கப்படுகிறது.. இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பது மூலம் கண் திருஷ்டி போன்ற எதுவும் நம்மை அண்டாது... வீட்டின் முன் பகுதியில் எந்த இடத்திலும் இந்த செடியை வளர்க்கலாம்.. வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டிற்கு தூபம் போடும் போது மருதாணியின் விதைகளையும் சேர்த்து போட்டால் கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது... அதனால்தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு வீட்டிலும் மருதாணி செடியை வளர்த்தார்கள்.. இந்த மருதாணி செடி வளரும் இடத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் மட்டுமேஉண்டாகும்..
முன்பெல்லாம் திருமணம் என்றாலே மணப்பெண் முதல் அனைத்து பெண்களும் மருதாணி இலையை தான் அரைத்து கைகளில் பூசுவார்கள்... ஆனால் இன்று ரசாயனத்தில் செய்யப்படும் ஹென்னா வை அனைத்து திருமணங்களிலும் பயன்படுத்துகிறார்கள்...
நாகரிக வளர்ச்சியின் காரணமாக செயற்கையாக உருவாகும் ஹென்னா போன்ற ரசாயன கலவையை நாம் உபயோகப்படுத்துகிறோம்.. இதனால் உடம்பிற்கு தேவையில்லாத பிரச்சினைகள் தான் உண்டாகிறது... எத்தனையோ விபரீதமான பிரச்சினைகள் உருவாவதை அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்.. இயற்கையை தூக்கிப் போட்டு செயற்கையை கையில் எடுத்தால் இப்படித்தானே நடக்கும்..
சரி அதை விடுங்க, வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு, வெயிலிலிருந்து தப்பிக்க எந்த சன் ஸ்கிரீம் போடலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு இயற்கையாகவே உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய மருதாணி எங்க இருக்குன்னு பாருங்க... அதை தேடிப் பிடிங்க.. தினமும் போட முடியலன்னாலும் கூட மாசத்துல ஒரு நாளாவது கையில அரைச்சு பூசுங்க... அப்புறம் பாருங்க.. கை சிவப்பதோடு, எவ்வளவு வெயில் அடிச்சாலும் உங்க உடம்பும் மனசும் ஜில் ஜில் கூல் கூல் ஆயிரும்.. அப்புறம் வெயிலாவது ஒன்னாவது!