15 ஆண்களை திருமணம் செய்து.. மோசடி செய்தாரா கல்யாண ராணி சத்யா?.. புதுச்சேரியில் கைது!
திருப்பூர்: பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி பண மோசடி செய்ததாக சர்ச்சைக்குள்ளாகி, கல்யாண ராணி என வர்ணிக்கப்படும், சத்யா என்கிற சந்தியாவை புதுச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் தாராபுரம் அருகே 29 வயதான மகேஷ் அரவிந்த் மாட்டுத்தீவன நிறுவனம் நடத்தி வருகிறார். ஈரோடு கொடுமுடியை சேர்ந்த சத்யா என்பவருடன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மகேஷ் செல்போன் செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களின் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசி வந்துள்ளனர். இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது .
ஒரு கட்டத்தில் மகேஷ் அரவிந்த் சத்யாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இருவருக்குள்ளும் பழக்கம் அதிகமாகி, ஒருவரை ஒருவர் அவ்வப்போது சந்தித்தும் வந்துள்ளனர். அப்போது ஒரு நாள் சத்யாவின் உறவினர் எனக் கூறி தமிழ்ச்செல்வி என்ற பெண் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார்.
இதனை அடுத்து தமிழ்ச்செல்வியும் சத்யாவும் அடிக்கடி ஏதாவது ஒரு காரணம் காட்டி மகேஷ் அரவிந்த் அரவிந்திடம் பணம் பறித்துள்ளனர். மகேஷ் அரவிந்தம் காதல் மயக்கத்தில் அவ்வப்போது பணத்தை கொடுத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் தேதி மகேஷ் அரவிந்தும் , சத்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் மகேஷ் மனைவியான சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையே சத்யா தன் வீட்டில் இருந்து கொண்டே அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த மகேஷ் அரவிந்துக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து சத்யாவை கண்காணிக்க ஆரம்பித்து அவரது செல்போனையும் நோட்டமிட்டார். அப்போது சத்யா பல ஆண்களிடம் தொடர்பு கொண்டு பேசியது, தெரிய வந்தது. மேலும் பல ஆண்களிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவியிடம் சென்று கண்டித்தார். இந்த விஷயம் தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு, சத்யா வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் அரவிந்த், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சத்யா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, 12 சவரன் நகை மற்றும் 50000 ரொக்கப்பணதை எடுத்துச் சென்று விட்டதாகவும், என்னைப் போல பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு சத்யாவை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் அவருடைய செல்போன் நம்பரை வைத்து சத்தியா புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் சத்யாவை புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர். இதன் அடுத்து நேற்று சத்தியாவை தாராபுரம் அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
சத்யா 15 ஆண்களைத் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறின. ஆனால் இன்று போலீஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக கொண்டு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் 15 கல்யாணம் செய்யவில்லை. செய்தது 5 தான். அனைத்து ஆதாரங்களையும் நான் வெளியிடுவேன். எனது குடும்பத்தை கேவலமாக எழுதாதீர்கள் என்று சத்தமாக கூறி விட்டுப் போனார். விசாரணையில்தான் சத்யாவின் முழு விவரங்களும் வெளியாகும்.