"அஸ்திராலயா.. ஆஸ்திரேலியா".. ஆமா, கட்ஜூ நல்லாதானே இருந்தாரு.. ஏன் இப்படி ஆயிட்டாரு??

Su.tha Arivalagan
Nov 20, 2023,08:11 PM IST

டெல்லி:  உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏன் நம்மைத் தோற்கடித்து கோப்பையை வென்றது என்பது குறித்து  முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஒரு மேட்டரைக் கூறியுள்ளார். அதைப் பார்த்து பலரும் அவரை செமையாக கலாய்த்துக் கொண்டுள்ளனர்.


மார்க்கண்டேய கட்ஜு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். எப்போதும் ஜாலியாக பேசக் கூடியவர் கட்ஜு. அவர் கலாய்க்காத ஆட்களே இல்லை. திடீரெ தமிழ் சினிமா குறித்துப் பேசுவார். காதல் குறித்துப் பேசுவார்.. யாரையாவது சீண்டுவார். 


இந்த நிலையில் இப்போது இந்தியா ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தை வைத்து இப்போது அவரை பலரும் கலாய்த்துக் கொண்டுள்ளனர். அப்படி என்னதான் சொல்லி விட்டார் கட்ஜு.. ?




மகாபாரத காலத்தில் பாண்டவர்களின் ஆயுதக் கிட்டங்கியாக இருந்த இடம்தான் இன்றைய ஆஸ்திரேலியா. அதை அஸ்திராலயா என்றுதான் அழைப்பார்கள்.. அதுதான் பின்னர் ஆஸ்திரேலியா என்று மாறி விட்டது. இதுதான் ஆஸ்திரேலியா நம்மைத் தோற்கடிக்க உண்மையான காரணம் என்று அவர் கூறப் போக டிவிட்டர் களமே வெடித்துச் சிரித்துக் கொண்டுள்ளது.


இதைப் பார்த்த ஒருவர், சூப்பர்ஜி.. சரியாச் சொன்னீங்க போங்க.. துபாயைக் கூட துபேதான் கண்டுபிடிச்சார். அதேபோல எகிப்தையும், ஏதோ ஒரு மிஸ்ராதான் கண்டு பிடிச்சார் (எகிப்தை இந்தியில் மிஸ்ர் என்று சொல்வார்களாம்), அதே மாதிரி இஸ்ரேலைக் கூட யாதவாஸ்தான் கண்டுபிடிச்சாங்க. நம்ம பஹ்ரைனை பிரம்மன் கண்டுபிடிச்சார்.. சவூதி அரேபியாவை சரஸ்வதி தேவி கண்டுபிடிச்சாங்க.. சூப்பர் ஜி என்று பதிலுக்கு கட்ஜுவை சூப்பராக கலாய்த்துள்ளார்.


இன்னொருவரோ உதயநிதி ஸ்டாலின் கபகபவென சிரிக்கும் படத்தைப் போட்டு, யோவ் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்காயா என்று கேட்டு விட்டுப் போயுள்ளார். இன்னொரு நபரோ, ஓகே பூமர் அங்கிள் என்று நக்கல் விட்டுள்ளார்.


ஆமா, கட்ஜூ நல்லாதானே இருந்தாரு.. ஏன் இப்படி ஆயிட்டாரு??