மார்கழி திருவெம்பாவை பாசுரம் 09 .. "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே"

Aadmika
Dec 25, 2023,10:27 AM IST

திருவெம்பாவை பாசுரம் 09 :


முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.




பொருள் :


உலகில் உள்ள பழமையான விஷயங்கள் அனைத்திற்கும் பழமையானதாக விளங்கக் கூடிய சிவ பெருமானே, நீயே புதுமையான விஷயங்கள் அனைத்திற்கும் புதுமையாகவும் விளங்குபவன். உனது அடிகளை பற்றி, உன்னையே கதி என்று சரணடைகிறோம். உனது திருவடிகளில் பணிந்து, நீயே அனைத்தும் என உன்னிடம் எங்களை ஒப்படைக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல எங்களின் கணவராக வரப் போகின்றவர்களையும் உனது அடியார்களாக ஆக்குவோம். அவர் மன மகிழ்ச்சியுடன் சம்மதம் சொன்ன பிறகு, அவர்களின் அனுமதியுடன் உன்னை பணிந்து, உனக்காக தொண்டு செய்வோம். இந்த வகையில் நாங்கள் உன் மீது பக்தி செய்து வந்தால் எங்களுக்கு எந்த காலத்திலும், எந்த பிறவியிலும் எந்த குறையும் ஏற்படாது.


விளக்கம் :


இறைவனின் பெருமைகளையும், இறைவனை வணங்குவதன் அவசியத்தையும் ஆண்கள் பேசிக் கொள்வதை போல் இல்லாமல், எதற்காக தோழிர்கள் பேசிக் கொள்வதை போல் திருவெம்பாவை பாடல்களை இயற்றியதன் காரணத்தை இந்த பாடலில் விளக்கி உள்ளார் மாணிக்கவாசகர். ஆண்கள் பக்தி செய்தால் அவர்கள் மட்டுமே பக்தியின் பாதையில் செல்வார்கள். ஆனால் பெண்கள் பக்தி செய்தால் அவர்களின் கணவர்கள் உள்ளிட்ட வீட்டில் உள்ள அனைவரையும் அவர்கள் பக்தி செய்ய வைத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நல்வழியில் செல்ல வேண்டும் என்றால் அது அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.