மார்கழி திருவெம்பாவை பாசுரம் 07 - அன்னே இவையும் சிலயோ பல அமரர்
முதல் முறையாக பாட துவங்கும் மாணிக்கவாசகர், இறைவனின் அருளால் அவரைப் போற்றி பாடுகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வரும் தோழிகள், அப்படியே சிவ பெருமானின் பெருமைகளையும், அவரை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் சொல்வதைப் போல். உலக மக்களுக்கு சிவபெருமானின் அருளை பெறுவதற்கு என்ன வழி என்பதை எடுத்துரைக்கிறார்.
திருவெம்பாவை பாசுரம் 07 :
அன்னே இவையும் சிலயோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள் :
தேவர்களாலும் அணுக முடியாத உலகிற்கே தலைவனாக இருக்கக் கூடிய சிவ பெருமானின் சின்னங்களை எங்கு பார்த்தாலும் உடனே சிவ சிவ என ஓடி வந்து விடுவாயே? தென்னானுடைய சிவனே போற்றி என எங்கு ஓசை கேட்டாலும் அந்த மொழியில் உடனடியாக உள்ளம் உருகி ஓடி வந்து விடுவாயே. அந்த சிவன் எனக்குரியன், என் தலைவன் என சொல்லிடுவாயே. இப்போது அந்த இறைவனின் பெருமைகளை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. இவை அனைத்தையும் கேட்டுமா உனக்கு தூக்கம் போகவில்லை.
விளக்கம் :
ருத்ராட்சம், திருநீறு, சிவனடியார்கள் போன்ற சிவ சின்னங்களை எங்கு பார்த்தாலும் அதை சிவனின் அடையாளமாக கருதுவது சிவ பக்தர்களின் வழக்கம். சைவத்தில் குறிப்பிடப்படும் சிவ சின்னங்கள் வெறும் அடையாளங்களாக இல்லாமல், நம்மை காப்பதற்காக சிவன் அந்த பொருட்களின் வடிவில் இந்த பூலோகத்தில் இருக்கிறான். அவரை பாடி, உள்ளத்தில் நினைத்து, பக்தி செய்து, சிவனை நமக்குள் உணர வேண்டும் என்பதையே மாணிக்கவாசகர் இந்த பாடலில் உணர்த்துகிறார்.