மார்கழி திருவெம்பாவை பாசுரம் 11 .. "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்ன"
மாணிக்கவாசகர், திருவெம்பாவையின் முதல் 10 பாடல்களிலும் இறைவன் மீது பக்தி செய்ய வாருங்கள் என உலக மக்கள் அனைவரையும் அழைத்தார். இன்றைய 11வது நாள் பாடலில் தங்களின் பக்தியை ஏற்றுக் கொண்டு, தங்களுக்கு அருள் செய்து, முக்தி என்றும் பெரும் செல்வத்தை தர வேண்டும் என சிவ பெருமானிடம் கோரிக்கை வைக்கிறார்.
திருவெம்பாவை பாசுரம் 11 :
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடிவோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்ட ருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யம் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்
பொருள் :
குளத்தில் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் தேன் குடிப்பதற்காக வண்டு இனங்கள் கூடி இருக்கின்றன. அந்த அழகிய குளத்தில் குதித்து, உன்னுடைய திருவடிகளின் புகழை பாடிய படியே நாங்கள் நீராடிக் கொண்டிருக்கிறோம். உடல் முழுவதும் வெண்மையான திருநீற்றை பூசிக் கொண்டிருக்கும் சிவந்த திருமேனியை உடையவன் நீ. உன்னுடை பெருமைகளை எங்களால் முடிந்த வரையில் பாடிக் கொண்டிருக்கிறோம். சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் கொண்ட பார்வதி தேவியை உனது உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டவன் நீ. அது போல் எங்களை சோதித்து விளையாடாமல், ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ எங்களை ஏற்றுக் கொள்ளும் அந்த நொடியை நினைக்கும் போது இப்போதே அந்த ஆனந்தத்தை பெற்று விட்டது போல் எல்லை இல்லாத மகிழ்ச்சியை பெறுகிறோம்.
விளக்கம் :
பக்தி என்பது அழகான தாமரை, அல்லி போன்ற மலர்கள் மலர்ந்து இருக்கும் குளம். உலக மக்கள் அனைவரும் பலவிதமான ஆசைகளால் மாயை என்னும் அழுக்கு படிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனதையும் ஆத்மாவையும் சுத்தப்படுத்திக் கொள்ள பக்தி என்னும் குளத்தில் குளிப்பது அவசியம். அவ்வாறு தூய்மை அடைந்து, பக்குவப்படும் ஆத்மாக்களை இறைவன் விளையாட்டாக ஏற்றுக் கொள்வார். முக்தி என்னும் பெரும் பாக்கியத்தை இறைவன் நமக்கு அளிக்க வேண்டும் என்றால் நாம் பக்தி செய்து, உலக இன்பங்களாகிய அழுக்குகளில் இருந்து விடுபட்டு, தூய்மை அடைய வேண்டும் என மாணிக்கவாசர் பக்தியின் அவசியத்தை உணர்தஅதுகிறார்.