மார்கழி திருவெம்பாவை பாசுரம் 08 - கோழி சலம்பச் சிலம்பும் குருகெங்கும்

Aadmika
Dec 24, 2023,07:29 AM IST

மாணிக்கவாசகர் நேரடியாக பக்தி செய்யுங்கள் என சொல்லாமல், இந்த உலகத்தில் உள்ளவர்களை சிறிய பெண் பிள்ளைகளை போல் பாவித்து, தோழிகள் விளையாட்டாக பேசிக் கொள்வது போன்று இறைவனின் பெருமைகளையும், அவரை நாம் பக்தி செய்து, போற்றி, அவரின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே திருவெம்பாவை பாடல் தொகுப்பாகும். 




திருவெம்பாவை பாசுரம் 08 :


கோழி சலம்பச் சிலம்பும் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை யாமறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய் 


பொருள் :


கோழிகளும், சேவல்களும் கூவுவதற்கு தயாராகி விட்டனர். சப்த ஸ்வரங்கள் அடங்கிய இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு அடியவர்கள் திருவண்ணாமலை கோவில் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதுவும் உன்னுடைய காதில் விழவில்லையா? வெள்ளை சங்கு ஒலி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கூடவா உன்னுடைய காதில் விழவில்லை? சிவனையும், அவரது அடையாளமாக விளங்கக் கூடிய சிவ சின்னங்களை போற்றி நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். இதைக் க6ட நீ கேட்கவில்லையா? இப்படிப்பட்ட உன்னுடைய தூக்கம் வாழ்க. 


பெண்ணே! வாயை திறந்து பேசு. உலகத்திற்கே தலைவன் நம்முடைய இறைவன் மட்டும் தான். அவன் மீது கடல் போல் அன்பு செய்து நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். தன்னை தேடி வரும் பக்தன் பணக்காரனா, ஏழையா என்ற பாகுபாடு பார்க்காமல், எளியவர்களுக்கு எளியவராக இருந்து தன்னுடைய அருளை வழங்கி வரும் இறைவனை பாடி, வணங்க வேண்டும்.


விளக்கம் :


சிவ பெருமான் எவ்வளவு உயர்ந்தவரோ அதே போல் அவருடைய அடையாளமாக கருதப்படும் சிவ சின்னங்களும் உயர்ந்தவை. சிவ சின்னங்களை விட சிவனின் கருணை பெரியது. அதனால் சிவனின் அடையாளங்களும், சிவனும் ஒன்று தான் என எண்ணி பக்தி செய்ய வேண்டும்.


நமக்கு பக்தியை வலியுறுத்துவதற்காகவே திருநீறு, வெண் சங்கு, திரிசூலம், ருத்ராட்சம் உள்ளிட்ட சிவ சின்னங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் வகையில் உள்ளன. அவற்றை பார்க்கும் போதாவது இறைவனின் சிந்தனை நமக்கு வந்து, நாம் இறைவனை மறந்து விட்டோமே என்ற உணர்வு ஏற்பட்டு, பக்தி செய்ய வேண்டும் என கூறுகிறார் மாணிக்கவாசகர்.