மார்கழி 27 திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 : அது பழச்சுவையென அமுதென
- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 :
அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள் :
பழங்களின் சுவைகள், அமுதத்தின் சுவை ஆகியவற்றை விட மேலான எவரும் அறிந்து கொள்ள முடியாத அரிய சுவையாக விளங்குவது உன்னுடைய திருநாமத்தை சொல்லும் சுவை. அதன் சுவை என்ன, எப்படி இருக்கும் என தேவர்களும் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இது தான் உன்னுடைய உருவம். நீ இப்படி தான் இருப்பாய், இவரை போல் இருப்பாய், அவரை போல் இருப்பாய் என எவராலும் கண்டு சொல்ல முடியாது. உன்னுடைய குணங்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகும். உன்னை எளிதாக அடைந்து விடலாம் என சொல்கிறார்களே தவிர தேவர்களாலும் கூட அதை செய்ய முடியாது. எவருக்கும் உன்னுடைய நிஜ வடிவத்தை காட்டி, இது தான் என சொல்ல முடியாத நீ, எங்களை ஆட்கொண்டு அருள வேண்டும் என்று தான் கேட்க முடியும். அதை மட்டும் செய் என்றே உன்னிடம் கேட்கிறோம். தேன் சிந்தும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பட்ட உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! அதற்காக துயில் எழுந்தருள வேண்டும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்