அடிக்கிற மழைக்கு சூடா என்ன சாப்பிடலாம் .. அட.. சூப்பரான மரவள்ளிக் கிழங்கு இருக்கே..!
- சந்தனகுமாரி
இந்த மழைக்கு சூடா என்ன சாப்பிடலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கிறப்பதான் தோணுச்சு மரவள்ளிக்கிழங்கு வாங்கி சாப்பிடலாம்னு. ஏன் சொல்றேன்னா சாயங்காலம் நேரத்துல ரெண்டு துண்டு கிழங்கும் ,ஒரு கிளாஸ் காப்பியும் குடிக்கிறப்ப கிடைக்கிற டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.
எங்க ஊர்ல மரவள்ளிக்கிழங்குன்னு சொல்லுவோம். சிலவங்க கம்புக்கிழங்குன்னு சொல்றாங்க. இந்த கிழங்கு அதிக அளவில் சாப்பிடக்கூடியவங்க கேரள மக்கள்தான். அவங்க கப்பக்கிழங்கு அப்படின்னு சொல்றாங்க. ஒரு காலத்தில் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டபோது மலையாள மக்களுக்கு கப்பல் வழியாக இந்த கிழங்கு வந்து இறக்குமதி செய்யப்பட்டு பயிரிடப்பட்டது. ஆதலால் காலப்போக்கில் கப்ப(ல்)க் கிழங்கு என்று சொல்லாயிற்று. இது உண்மையா பொய்யான்னு தெரியல நான் கேள்விப்பட்டவரை எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.
இது ஒரு வேர் கிழங்கு ஆகும். பூமிக்கு அடியில் விளையக்கூடிய ஒரு வகை கிழங்கு. கிழங்கு என்றால் சாதாரண கிழங்கு இல்லை அவ்வளவு சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. வாங்க என்னென்ன வென்று என்று விரிவாக காண்போம்.
மரவள்ளி கிழங்கில் கலோரிகள், கார்போஹைட்ரேட்கள், விட்டமின்கள், தாதுக்கள் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதனால் அதை உண்பதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. விட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குறைகிறது. குறிப்பாக சொல்லப் போனால் கண் பார்வை குறைபாடு பிரச்சனை எளிதில் குறைவடையும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த கிழங்கை சமைத்து உண்பதன் மூலம் ஈஸியாக உடலை குறைத்துக் கொள்ள முடியும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை நீக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
மரவள்ளிக் கிழங்கின் தோல் உடலில் ஏற்படும் சரும பிரச்சனையை சரி செய்யக்கூடியது. மேலும் இந்தக் கிழங்கின் தோல் ஆனது சரும பிரச்சனைகள் மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் தழும்புகளையும் சரி செய்ய வல்லது. உடலின் சிவப்பணுக்களை அதிகரிக்க இந்தக் கிழங்கு பெரும் அளவில் உதவுகிறது.
அது மட்டும் இல்லைங்க நம்ம பாயசத்துக்கு உபயோகப்படுத்துகிற ஜவ்வரிசி இந்த மரவள்ளி கிழங்கு மாவிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ஜவ்வரிசி பத்தி நம்ம எல்லாத்துக்குமே நல்லா தெரியும் உடல் சூட்டை குறைக்க அந்த அளவுக்கு உதவும். ஜவ்வரிசி கஞ்சி உடலுக்கு தேவையான எனர்ஜியை நமக்கு கொடுக்கிறது. அல்சர் உள்ளவர்கள் ஜவ்வரிசி கஞ்சி சாப்பிடும் போது சிறிது நாட்களிலே வயிற்றுப்புண் குணமடையும்.
பொதுவாக கிழங்கு என்றாலே வாயு தொல்லைகள் அதிகமாக இருக்கும். அதுபோலத்தான் மரவள்ளி கிழங்கும் வாயு தொல்லையையும் ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இந்த மரவள்ளி கிழங்கு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதில் இனிப்புச் சத்து அதிகம் உள்ளது. அதுபோல இந்த கிழங்கை பறித்து இரண்டு மூன்று தினங்களுக்குள் சமைத்து சாப்பிட வேண்டும் இல்லை என்றால் லேசாக பச்சை நிறத்தில் முதலில் தோன்றும் .அதன்பிறகு கசப்பு தன்மை கொடுத்து விடும் அதாவது லேசாக அழுகிவிடும்.
இனி மரவள்ளிக்கிழங்கை வைத்து என்னென்ன ரெசிபிகள் செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போம். நாங்கள் மீன் வாங்கும் போதே கையோடு கிழங்கும் வாங்கி விடுவோம். எங்கள் வீடுகளில் எல்லாம் மீன் குழம்பு வைக்கும் போது மரவள்ளி கிழங்கு கறி கண்டிப்பா வைப்போம். அதுவும் அந்த மீன் குழம்பு சுவையோடு கிழங்கையும் சேர்த்து சாப்பிடும் போது சொல்ல முடியாத அளவுக்கு ருசியாக இருக்கும்.
மரவள்ளிக்கிழங்கு கறி :
மரவள்ளிக்கிழங்கு நன்கு வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு பிடி தேங்காய் துருவலுடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம் ,ஒரு டீஸ்பூன் மஞ்சள், இரண்டு சின்ன உள்ளி சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும். பின்னர் மசித்து வைத்த கிழங்குடன் இந்த மசாலாவை சேர்த்து நன்கு கிண்டி வேக வைக்க வேண்டும். கடைசியாக கடுகு காய்ந்த வத்தல் கருவேப்பிலை சேர்த்து தாளிசம் செய்ய வேண்டும். தாளிக்கும் போது கண்டிப்பாக தேங்காய் எண்ணெயில் தாளிக்க வேண்டும். இப்போது அந்த சுவை இன்னும் அதிகரிக்கும்.
மரவள்ளி கிழங்கு தாளிப்பு:
எங்கள் வீடுகளில் எல்லாம் அவசரத்திற்கு காலை உணவு இல்லை என்றால் உடனடியாக மரவள்ளிக் கிழங்கு வாங்கி அதன் தோலை சீவி நடுவில் உள்ள நரம்பையும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைக்க வேண்டும். வேகவைக்கும் போதே சிறிதளவு உப்பு போட்டுக்கொள்ள வேண்டும். நன்கு வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி விட்டு கிழங்குடன் தாளிசம் செய்து சிறிது தேங்காய் அதன் மேல் தூவி சாப்பிடுவோம். ருசி அவ்வளவு இருக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு கப் என்று நிறைந்துவிடும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது.
மரவள்ளி கிழங்கு புட்டு:
மரவள்ளி கிழங்கு தோலை நீக்கி அதை நன்கு சீவி (துருவி) எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து லைட்டா பிசைந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் மட்டும் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. பிறகு நாம் புட்டு வேக வைக்கும் பாத்திரத்தில் கிழங்கும் அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது ஈசியாக டேஸ்டியான கிழங்கு புட்டு ரெடி.
இதுபோக இப்போதெல்லாம் கிழங்கு சிப்ஸ்,கிரேவி, வடை, அடைதோசை, பாயசம், கஞ்சி, காரக்குழம்பு என வெரைட்டியாக மக்கள் செய்து சாப்பிடுகின்றனர். அதில் நமக்கு தேவையான ருசியை மட்டுமல்ல சத்துக்கள் பல அதில் அடங்கியுள்ளன. இதனுடைய பயன்கள் பற்றி அறியாதவர்கள் இனி மரவள்ளி கிழங்கு கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். இயற்கை நமக்கு கொடுத்த இயற்கையான உணவுகளை உண்போம். செயற்கை உணவுகளை தவிர்த்து விடுவோம்.