மன்சூர் அலிகானின் சாக்கடைப் பேச்சு.. நடிகர்களுக்குள் ஒளிந்திருக்கும் "வக்கிரம்".. திருந்துவார்களா?

Su.tha Arivalagan
Nov 19, 2023,09:00 AM IST

சென்னை: நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய அநாகரீகப் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. நடிகர்களுக்குள் ஒளிந்திருக்கும் வக்கிரம் இனியாவது ஒழிய வேண்டும்.. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க திரைத்துறையினரே முன்வர வேண்டும் என்று பலத்த குரல்கள் எழுந்துள்ளன.


நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையாக  பேசுவது இது முதல் முறையல்ல. அவர் அப்படிப் பேசாவிட்டால், நடந்து கொள்ளாவிட்டால்தான் ஆச்சரியம். சமீப காலமாக அவரது பேச்சுக்கள் பல சலசலப்புகளை ஏற்படுத்தியபடிதான் உள்ளது.




லியோ படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தாதா கேங் ஆன தாஸ் சகோதரர்கள் கும்பலில் இடம் பெற்றுள்ள ஒரு அடிாயளாக படத்தில் வருவார் மன்சூர் அலிகான். இந்த நிலையில் ஒரு பேட்டியின்போது நடிகை திரிஷா குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார்.


அப்போது மன்சூர் அலிகான் பேசுகையில் மிகவும் அநாகரீகமான முறையில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு திரிஷா பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டிருந்த டிவீட்டில்,  நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி மிகவும் இழிவாக பேசிய வீடியோ எனது கவனத்திற்கு வந்தது.  மிகவும் அறுவறுக்கத்தக்க பேச்சு இது. இதை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். பாலியல் ரீதியிலான, மரியாதைக்குறைவான, ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட, மோசமான உணர்வுடன் கூடிய இந்தப் பேச்சை நான் வெறுக்கிறேன்.  அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும், ஆனால் இதுபோன்ற மோசமான மனிதருடன் நான் இணைந்து நடிக்கவில்லை என்பதற்காக மகிழ்கிறேன். இந்த நபருடன் எதிர்காலத்திலும் நான் இணைந்து நடிக்க மாட்டேன். இதுபோன்ற நபர்களால், மனித குலத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று கூறியிருந்தார் திரிஷா.


இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானை கடுமையாக கண்டித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவீட்டில், மன்சூர் அலிகான் வெளிப்படுத்தியிருந்த மோசமான கருத்துக்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், மிகவும் கோபமாக இருக்கிறேன். அனைவரும் ஒரே அணியாகத்தான் அப்படத்தில் பணியாற்றினோம். பெண்கள் மீதான மரியாதையும், சக கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மீதான மரியாதையிலும் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. இந்த நடத்தையை கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் லோகேஷ்.


இது முதல் முறையா??




நடிகர்கள் இப்படி அறுவறுக்கத்தக்க முறையில் பேசுவது முதல் முறையல்ல. ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும்போதும் நடிகர்கள் இப்படிப்பட்ட கேவலமான இழிவான கருத்துக்களைத் தெரிவிக்கத்தான் செய்கிறார்கள். மன்சூர் அலிகான் பட்டவர்த்தனமாக தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பல ஹீரோக்கள் மேல் பூச்சு பூசி தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.. அவ்வளவுதான் வித்தியாசம்.


நம்முடன் நடிக்கும் நடிகை, சக கலைஞர், அவரும் நம்மைப் போன்றவர், நம்மிடம் இருக்கும் மரியாதை, கெளரவம், கண்ணியம் அவருக்கும் உண்டு என்பதையே இந்த ஆண் கலைஞர்கள் மறந்து விடுகிறார்கள். மேடை கிடைத்து விட்டது, மைக் கிடைத்து விட்டது என்பதற்காக அநாகரீகமாக பேசுவதை இவர்கள் ஒரு உரிமையாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.


லியோ வெற்றி விழா மேடையிலேயே மன்சூர் அலிகானின் பேச்சின் பல பகுதிகள் முகம் சுளிக்க வைப்பதாகவே இருந்தது. இன்னொரு நடிகையான மடோனா செபாஸ்டியன் குறித்தும் அவர் அநாகரீகமாகத்தான் பேசியிருந்தார். அதேபோல சக நடிகரான ஜார்ஜ் மரியானையும் கூட அவர் உருவக் கேலி செய்து பேசியிருந்தார்.


அர்ஜூன் பேச்சும் அதே ரகம்தான்




இதே விழாவில் நடிகர் அர்ஜூனும் கூட திரிஷா குறித்துப் பேசியிருப்பார். மங்காத்தாவிலும் திரிஷா நடித்திரு்நதார். அதிலும் ஜோடியாக நடிக்க முடியலை.. இதிலும் ஜோடியாக நடிக்க முடிலை என்று கூறியிருந்தார் அர்ஜூன். அதுவும் கூட தவறான பேச்சுதான். இப்படியெல்லாம் பேசுவது அந்தப் பெண்களை எந்த அளவுக்கு மன ரீதியாக பாதிக்கும் என்பதை இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.


ஏன் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கூட, ஜெயிலர் பட ஆடியோ விழாவின்போது தமன்னா குறித்து கூறிய கருத்துக்களும் கூட கிட்டத்தட்ட முகம் சுளிக்க வைக்கும் ரகம்தான். அதையும் கூட அனைவரும் ரசித்துதப் பார்க்கத்தான் செய்தோம்.


ஒருவரை கேவலப்படுத்தும்போது, இழிவுபடுத்தும்போது, அசிங்கப்படுத்தும்போது, அநாகரீகமாக சித்தரிக்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதை நிறுத்தி விட்டு, வெகுண்டு எழுந்து ஒரே குரலில் கண்டிக்கும்போதுதான் இதுபோன்ற வக்கிரங்களுக்கு முடிவு வரும்.. அதுவரை தொடரவே செய்யும்.. மன்சூர் அலிகானுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்களா இல்லையா.. பொறுத்திருந்து பார்ப்போம்.



திரிஷா கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்க.. மன்சூர் அலிகான் விளக்கம்!