பாகுபலி இல்லைன்னா பொன்னியின் செல்வன் கிடையாது.. மனம் திறந்து பாராட்டிய மணிரத்னம்

Aadmika
Apr 25, 2023,03:44 PM IST
ஐதராபாத் : பாகுபலி படத்தை ராஜமெளலி எடுத்திருக்கவில்லை என்றால் பொன்னியின் செல்வனை தன்னால் இயக்கி இருக்க முடியாது என டைரக்டர் மணிரத்னம் மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

டைரக்டர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவலை இயக்க பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்தார். 1994 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் பொன்னியின் செல்வன் கதையை இயக்கி முயற்சித்தும், தோல்வி அடைந்தார். 

இறுதியாக தனது பல ஆண்டு கால முயற்சிக்கு பிறகு 2022 ம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை இயக்கி, மிக பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது.



இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 28 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலையில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சென்னை, கோவை, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பல ஊர்களில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் டைரக்டர் மணிரத்னமும் கலந்து கொண்டு பேசினார். மிக அரிதாகவே பட ப்ரொமோஷனில் கலந்து கொள்ளும் மணிரத்னம், இந்த படம் உருவாக காரணமாக இருந்த சுபாஸ்கரனுக்கு நன்றி. பொன்னியின் செல்வன் படம் உருவாவதற்கு பாதை அமைத்துக் கொடுத்த டைரக்டர் ராஜமெளலிக்கும் இந்த சமயத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மட்டும் பாகுபலி படத்தை இயக்காமல் இருந்தால், இன்று பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்க முடியாது.

அவர் பாகுபலியை இரண்டு பாகங்களாக இயக்கியதால் தான் என்னால் பொன்னியின் செல்வன் படத்தை இருண்டு பாகங்களாக இயக்க முடிந்தது. பல வரலாற்று கதைகளை சினிமாவாக மாற்றுவதற்கு பாதை அமைத்துக் கொடுத்தவர் ராஜமெளலி. இதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். அவரிடமும் நேரடியாக கூறி, நன்றி தெரிவித்துள்ளேன். தற்போது மீண்டும் தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த சினிமா உலகிற்கே வரலாற்று கதைகளை சினிமாவாக இயக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் அவர் தான் என மணிரத்னம் பேசினார்.

மணிரத்னத்தின் இந்த பேச்சிற்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு டைரக்டரை மனம் திறந்து பாராட்டிய மணிரத்னத்திற்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.