மணிப்பூர் குரூரம்.. சுப்ரீம் கோர்ட் கடும் அதிர்ச்சி.. மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு

Su.tha Arivalagan
Jul 20, 2023,11:04 AM IST
டெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு நிர்வாணமாக ஒரு வெறி பிடித்த ஆண் கும்பலால் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த நாட்டில் நடந்தது இந்த நாட்டில் நடந்தது என்றுதான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நம்ம நாட்டில், அதுவும் ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாக விளங்கிய மணிப்பூர் மாநிலத்தில் இப்படி ஒரு குரூரமான சம்பவம் நடந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பதற வைத்து விட்டது. குறிப்பாக பெண்களை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் நிர்வாணப்படுத்தி கொடூரமாக சித்திரவதை செய்து தெருத் தெருவாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு ஒட்டுமொத்த நாடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் வேதனையும், கோபமும் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தற்போது சுப்ரீம் கோர்ட்டும் தன��ு கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் பொது வெளியில் நடத்திச் செல்லப்படுவது போன்று மணிப்பூரிலிருந்து  வெளியாகியுள்ள வீடியோ பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வன்முறை பாதித்த பகுதியில் பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்துவது மிக மோசமானது. இது மிகப் பெரிய அரசியல்சாசன விதி மீறலாகும். இந்த வீடியோக்கள் எங்களதை மனதை உலுக்குகின்றன. 

அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் செயல்பட வேண்டும். காலதாமதம் கூடாது. அரசியல்சாசன ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்களை ஏற்கவே முடியாது. மிகவும் மோசமாக இருக்கிறது மணிப்பூர் சம்பவம். வேதனை தருகிறது.

மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவலை இங்கு தெரிவிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 28) ஒத்திவைத்தார்.