மணிப்பூர் விவகாரம் : விடிய விடிய பார்லிமென்ட் முன் போராட்டம் நடத்திய "இ.ந்.தி.யா."

Aadmika
Jul 25, 2023,09:52 AM IST
டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்புமாக எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் சிலர் விடிய விடிய அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளனர். 

தற்போது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர்ந்து நடந்து வருகிறது. கூட்டம் துவங்கியது முதலே மணிப்பூர் வன்முறை தொடர்பான விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் எதிர்க்கட்சிகள். கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, கூட்டம் முடிந்ததும் இரவு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பி.,க்கள் சிலர் பார்லிமென்ட் கட்டிடம் முன் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த எம்பி.,க்கள் இரவு 11 மணியளவில் அமைதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், 3வது நாளாக பார்லிமென்ட் நடைபெற வில்லை. இதற்கு காரணம் எங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது தான். இரண்டு மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு இரண்டு அவைகளிலும் பிரதமர் மோடி தன்னிலை  விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல எம்.பி.,க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளனர். நேரக்கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைத்து கட்சிகளும் இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.