மணிப்பூர் முதல்வர் கையாலாகாதவராக இருக்கிறார் - டி.ஆர். பாலு கடும் பாய்ச்சல்

Su.tha Arivalagan
Aug 08, 2023,02:31 PM IST

சென்னை: மணிப்பூர் முதல்வர் கையாலகாதவராக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியோ, அந்த மாநிலத்துக்கே போகாமல் தவிர்த்தார். ஆனால் நாங்கள் போனோம் என்று கூறியுள்ளார் திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு.


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது அனல் பறக்க விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.


திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசினார். அவர் பேசுகையில்,  மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள மக்கள் ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 143 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். 65,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி புலம் பெயர்ந்துள்ளனர். 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பொது இடத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். குழு பலாத்காரமும் செய்யப்டடுள்ளனர்.


மணிப்பூர்  முதல்வர்  கையலாகாதவராக இருக்கிறார். பிரதமர் நாடாளுமன்றத்துக்கே வருவதில்லை. மணிப்பூருக்கும் அவர் போகவில்லை. ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சியின் பிரதிநிதிகள் அங்கு சென்றோம். மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்டோம்.


பாஜக அரசு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு உதாரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை என்று கூறினார் டி.ஆர்பாலு.