மணிப்பூர் முதல்வரின் பதவிக்கு ஆபத்தா?.. டெல்லியில் குவிந்த பாஜக, கூட்டணி எம்எல்ஏக்கள்
இம்பால்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிராக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று பிரேன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் பல மாதமாக கலவர பூமியாக காணப்படுகிறது. இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்து மிகப்பெரிய இனக் கலவரமாக மாறி விட்டது. இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 5000க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பல பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் நாசப்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக வெளியான சில வீடியோக்களும் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமலேயே உள்ளது.
இந்த நிலையில் தற்போது முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் சிலரும், கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பிரேன் சிங் விலக வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இதன் உச்சமாக தற்போது இந்த எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
2017ம் ஆண்டு முதல் முதல்வர் பதவியில் இருந்து வருகிறார் பிரேன் சிங். ஆனால் அவருக்கு எதிரானோர் தொடர்ந்து அவரை பதவியிலிருந்து இறக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். பாஜக தலைமைக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு மே 3ம் தேதி இனக் கலவரம் வெடித்த பிறகு இந்த முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் கட்சி மேலிடம் பிரேன் சிங்கை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது நிலைமை பிரேன் சிங்குக்கு எதிராக மாறியுள்ளதாக கட்சித் தலைமை கருதுகிறது. காரணம், மணிப்பூரில் நடந்த லோக்சபா தேர்தலில் அங்குள்ள 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி விட்டது. இது பாஜக தலைமையை அதிர வைத்துள்ளது. இதனால் பிரேன் சிங் மீது கட்சித் தலைமைக்கு அதிருப்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில்தான் அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், எம்எல்ஏக்களின் டெல்லி பயணத்திற்கும் தனது பதவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பிரேன் சிங் விளக்கியுள்ளார்.
மணிப்பூரில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பாஜகவுக்கு மட்டும் 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். லோக்சபா தேர்தலில் தோல்வி, தொடரும் கலவரம், அதிருப்தி எம்எல்ஏக்களின் அழுத்தம் என்று தொடர்ந்து பாஜக தலைமையிடம் பிரேன் சிங்குக்கு எதிரான அம்சங்கள் அதிகரித்து வருவதால், இந்த முறையும் அவர் தப்புவாரா அல்லது மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இனக் கலவரம் வெடித்தது முதலே பிரேன் சிங்கை மாற்றக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கூட கோரி வருகின்றன. ஆட்சியை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.