மணத்தக்காளி.. குட்டி குட்டியா இருக்கும்.. செம டேஸ்ட்டா இருக்கும்.. உடம்புக்கும் சூப்பர் நல்லது..!

Su.tha Arivalagan
Apr 30, 2024,05:15 PM IST

- சந்தனகுமாரி


மணத்தக்காளி.. இதன் உருவம் வந்து ரொம்ப சின்னதா மிளகு அளவில் இருக்கும். அந்த தக்காளி உள்ளே வித்துக்கள் முத்து முத்தாக இருக்கும். சொல்லப்போனால் தக்காளி போல தான்.. ஆனா குட்டி தக்காளி. நாங்க குட்டி தக்காளி அப்படி தான் சொல்லுவோம். சில பேரு மணத்தக்காளி அப்படி சொல்லுவாங்க. இன்னும் சில பேரு  மணி தக்காளி அப்படின்னு சொல்றாங்க. இது போக வட்டார பெயர்களும் நிறைய உண்டு.


கிராமப்புறங்களில் இருப்பவர்கள் அனைவரின் வீடுகளிலும் மணத்தக்காளி கண்டிப்பாக நிற்கும். எப்போது மணத்தக்காளி காய் கருப்பு நிறங்களில் பழமாகும் என்று தினமும் பார்த்துக்கொண்டே இருப்போம். அந்த பழத்தை பறித்து சாப்பிடுவதற்கு அவ்வளவு சண்டை பிடிப்போம். அது சாப்பிடுவதற்கு நன்கு ருசியாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு பழங்கள் மட்டும் இருக்காது செடியை சுற்றி சுற்றி பழங்களாக தான் இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அப்போது சண்டையிட்டு சாப்பிடற அந்த நினைவுகள் வேற. இப்ப எல்லாம் யாரு அப்படி இருக்காங்க. எது வேணுமோ கடையில் போய் ரெடிமேடா எது கிடைக்குதோ அதை தான் வாங்கி சாப்பிடுறாங்க. அதனால் நோய்களின் எண்ணிக்கை தான் அதிகமாகிறது. 


இயற்கை உணவுகளை யாரும் அதிகமாக விரும்புவதில்லை. அந்த காலங்களில் வீட்டை சுத்தி சுத்தி மணத்தக்காளி நிற்கும். இப்போ எல்லாம் சந்தைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாயிற்று. குளிர்ச்சி நிறைந்த மணத்தக்காளி வயிற்று  புண்களை சரி செய்ய வல்லது. வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் சூடு காரணமாக வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும் மணத்தக்காளி சிறந்த மருந்தாக விளங்குகிறது. குடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. 


காய்ச்சல் வரும்போது ஏற்படும் வாய் கசப்பு தன்மையை மணத்தக்காளி மென்று சாப்பிடும் போது விரைவில் சரி செய்கிறது. வாயில் ஏற்படும் புண்கள் தொல்லையையும் மணத்தக்காளி சரி செய்கிறது. உணவுடன் மணத்தக்காளி சேர்த்து சாப்பிடும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கிறது. பசி எடுக்காதவர்கள் மணத்தக்காளி சாப்பிடும் போது அவர்களுக்கு பசியை தூண்டுகிறது.


சரி இனி மணத்தக்காளி செடியில் இருந்து என்னென்ன சாப்பிடலாம் என்பதை பார்ப்போம். 


மணத்தக்காளி பழம்:




மணத்தக்காளி பழங்களில் கால்சியம் ,இரும்புச்சத்து, விட்டமின் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வைத்துக் கொள்கிறது. அதிக அளவில் பசியின்மையை தூண்டுகிறது. அதுபோக  கண் பார்வை குறைவாக உள்ளவர்கள், கண் எரிச்சல் கண் சூடு போன்றவை இருப்பவர்களும் இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு குளிர்ச்சியை உடலுக்கு அளிக்கிறது. கர்ப்ப காலங்களில் பெண்கள் சாப்பிடும் போது தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.  மேலும் சருமத்திற்கு தேவையான பொலிவை வழங்குவதில் மணத்தக்காளி பழங்கள் முன்னுரிமை வகிக்கிறது.


மணத்தக்காளி கீரை:




பொதுவாக அனைத்து வகை கீரைகளும் சத்துக்கள் நிறைந்தவையாக இருக்கும். அதுபோலவே மணத்தக்காளி கீரையும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தவையாக உள்ளது. மணத்தக்காளி கீரை உடன் மஞ்சள், சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சூப் வைத்து குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் குடற்புழுக்கள் அனைத்தும் வெளியேறும். மேலும் மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு கறி வைத்து சாப்பிடும்போது ருசியாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அனைத்தும் இதிலிருந்து கிடைக்கிறது. மலச்சிக்கலில் இருந்து விடுதலை கிடைக்கும். குடல் அலர்ஜி, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யும். கீரையை அடிக்கடி தோரன் செய்து சாப்பிடலாம். வரும் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம். ஏனென்றால் புற்று நோய்களின் செல்கள் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு உண்டு.


மணத்தக்காளி காய்:




மணத்தக்காளி காயை பறித்து உப்பிலிட்ட மோரில் போட்டு ஊற வைக்க வேண்டும். அன்று இரவு முழுவதும் நன்கு ஊறிய பின்பு மறுநாள் காலையில் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். பின்னர் இரவு எடுத்து மீதம் இருக்கும் மோரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இவர் அந்த மோர் மற்றும் வரை இதையே  செய்ய வேண்டும். நன்கு காய்ந்தவுடன் அதை ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு வற்றலை எடுத்து நெய்யில் வறுத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டாக இருக்கும். நாங்கள் பழம் கஞ்சிக்கு மணத்தக்காளி வத்தல் வைத்து சாப்பிடுவோம் ருசியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேலும் அந்த வடகத்தில் வத்த குழம்பு வைத்து சாப்பிடுவோம். நாம் கடைகளில் வாங்கும் போது ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். வீட்டில் செய்து சாப்பிடும் போது ருசி அள்ளும்.


இப்ப எல்லாம் கிராமங்களை போல நகரங்களில் மணத்தக்காளி செடி கிடைக்குமானு தெரியல. இல்லாதவங்க வீடுகளில் மாடி தோட்டம் அமைத்து மணத்தக்காளி செடி ஒன்று நட்டாலே போதும் அது இனப்பெருக்கம் செய்து நிறைய செடிகளை உருவாக்கும். இப்ப எல்லாம் ஆன்லைன்ல மணத்தக்காளி கீரை ரைஸ் பவுடர், இட்லி பொடி, மணத்தக்காளி  வத்தல், மணத்தக்காளி ஃபேஸ் பேக் என எல்லாமே கிடைக்குது. வாங்கி என்ஜாய் பண்ணுங்க.