"அத்தனை பேரும் ஒன்று சேர வேண்டும்".. கரெக்ட்டாக பாயின்ட்டைப் பிடித்த மமதா பானர்ஜி!

Su.tha Arivalagan
Mar 30, 2023,10:13 AM IST


கொல்கத்தா: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற முடியும் என்று திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மமதா பானர்ஜி கூறியுள்ளார்.


சில நாட்களுக்கு முன்புதான், தனிக் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார் மமதா பானர்ஜி. அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக் ஆகியோரையும் இதுதொடர்பாக அவர் சந்தித்திருந்தார். ஆனால் தற்போது அப்படிய நேர் மாறாக பேசியுள்ளார். ராகுல் காந்திக்கு நேர்ந்த கதியால் அவரது மனது மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


நேற்று கொல்கத்தாவில் நடந்த  நிகழ்ச்சியில் பேசிய மமதா பானர்ஜி, பாஜகவை வீழ்த்த வேண்டும். ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். 


நிகழ்ச்சியில் மமதா மேலும் பேசுகையில், பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். இந்த துச்சாதனர்களிடமிருந்து நாட்டை காப்பாற்றியாக வேண்டும். இவர்களிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும், ஏழை மக்களைக் காக்க வேண்டும்.


பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள், குறி வைக்கப்படுகிறார்கள். ஆனால் கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்கள்.  அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏதாவது பேசினால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.  இன்று அரசியல் சாசன ஜனநாயகம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.


வரும் பொதுத் தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சந்தித்தால் மட்டுமே நாட்டை பாஜகவிடமிருந்து மீட்க முடியும். இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் மமதா பானர்ஜி.


மமதா பானர்ஜியின் இந்த மன மாற்றம் எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். காங்கிரஸைத் தவிர்த்து விட்டு எந்த கூட்டணி அமைத்தாலும் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் கூறி வருகிறார். காங்கிரஸும் கூட, தனது தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று தாங்கள் நினைக்கவில்லை. யார் தலைமையில்  கூட்டணி அமைந்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று கூறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.