"மத்தியப் படைகளை அனுப்பி.. கலவரத்தைத் தூண்டுங்க".. பாஜகவை விளாசிய மமதா பானர்ஜி
Apr 04, 2023,12:55 PM IST
கொல்கத்தா: மத்தியப் படைகளை கலவரத்தைத் தூண்டுவதற்காகவே மத்திய அரசு அனுப்புகிறது என்று கூறியுள்ளார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி.
பூர்பா மெதின்பூருக்கு வருகை தந்த மமதா பானர்ஜி அங்கு மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மத்தியப் படையினர் வந்தனர். 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்கினர். கலவரத்தைத் தூண்டி விட்டு சென்றனர். பின்னர் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
வருகிற பஞ்சாயத்துத் தேர்தலிலும், 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு மக்கள் ஓட்டுப் போடக் கூடாது. மறந்தும் கூட அந்தத் தவறை செய்து விடாதீர்கள். உங்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன், செய்வேன். பாஜகவை மட்டும் ஆதரிக்காதீர்கள். அது கலவரத்தைத் தூண்டும் கட்சி என்றார் மமதா பானர்ஜி.
ஹூக்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக யாத்திரையின்போது பெரும் கலவரம் வெடித்தது. அதேபோல ஹவுராவில் நடந்த ராம் நவமி கொண்டாட்டத்தின்போதும் கலவரம் வெடித்தது என்பது நினைவிருக்கலாம்.